ரஜினி கட்சி ஆரம்பித்தால் எங்களுக்கு ஒன்றும் பாதிப்பில்லை என்று திமுக கட்சி தலைவர்கள் மிடுக்காக அறிக்கைவிட்டாலும் பீதியிலே இருந்து வருகின்றனர். 

2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நான்கு முனைப் போட்டித்தான் (அதிமுக, திமுக, மக்கள் நலக்கூட்டணி, இவையன்றி பாஜக, பாமக, நாம் தமிழர் போன்றவை போட்டியிட்டனர். இதனால், குறைந்த வாக்கு சதவீத வித்தியாசத்தில் திமுக தோற்றாலும், அதிமுக வெற்றி பெற்றது. குறிப்பாக மக்கள் நலக்கூட்டணியால் திமுகவின் வெற்றி பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பலமுனை போட்டியாக அமையும் என்பதை உணர்த்துகின்றன. அதிமுக, திமுக, ரஜினி தவிர இன்னொரு அணி பாஜக அல்லது தேமுதிக தலைமையில் இருக்கும். பாமக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்,  சீமானின் நாம் தமிழர் போன்றவையும்  களத்தில் இருக்கும்.

அதிமுகவிற்கு எதிரான வாக்குகள் நேராக திமுகவிற்கு செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு, அது பலவாறாகப் பிளவுப்படும். இதுநாள்வரை திமுக சற்று முன்னணியில் இருப்பதாக சொல்லி வந்த  நிலை, தற்போது ரஜினியின் அரசியல் வருகையால் மாறிவிட்டது. சின்ன வித்தியாசம் கூட பெரிய இழப்பை ஏற்படுத்தும். இந்த சூழ்நிலையால் கூட்டணிக் கட்சிகளின் பேர வலிமை உயரும் அவை அதிக இடங்களைக் கோரும்,  அதனை திமுக எப்படி சமாளிக்கப்போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.