அந்த வகையில் ஆர்ப் முகமது கான் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நியமிக்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோல பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மர்ம் பெண் வேட்பாளராக நியமிக்க வாய்ப்புள்ளது, அதேபோல ஜே.பி நட்டாவை  குடியரசுத்  தலைவராக நியமித்துவிட்டு பாஜக தலைவர் பதவிக்கு பூபேந்தர் சிங் யாதவை நியமிப்பதன் மூலம் உ.பி, பிஹார் போன்ற மாநிலங்களில் யாதவர்கள் வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கும் என்பதால் இந்த திட்டமும் மோடியிடம் உள்ளது. 

இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவர் பட்டியலில் தமிழக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் பெயர் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா அரசியலை குறிவைக்கும் பாஜக மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குடியரசுத் தலைவர் பதவியை ஒதுக்கும் பட்சத்தில் அது ரஜினிக்கு ஒதுக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் 2022 ஜூலை 28ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 5 மாதங்களுக்குப் பின் ஜனாதிபதிக்கான தேர்தல் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக குடியரசுத்தலைவர் வேட்பாளர்களின் பெயர்கள் குறித்து பேச்சு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்சிக்குள் அடிபடுவதாக கூறப்படுகிறது. உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்குப் பின் அதற்கான தேர்வு பணிகள் தீவிரம் அடையும் என கூறப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளரை பொருத்தவரையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே 4 பெயர்கள் அடிபடுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. உத்திரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், கர்நாடக கவர்னர் தாவர் சந்த் கெளாட், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோரின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் தெலங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பெயரில் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு ஆளுநர் பதவி வழங்க வேண்டும் என்ற எண்ணம் பாஜக ஆர்எஸ்எஸ் தலைவர்களிடையே இருப்பதாகவும் அந்த வகையில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்துக்கும் வாய்ப்பிருப்பதாகவும் தற்போது செய்திகள் பரவுகின்றன. ஒவ்வொரு வேட்பாளருக்கு பின்னணியிலும் ஒரு அரசியல் இருக்கிறது. இதற்கு முன்பாக குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு தலைவருக்கு பின்னணியிலும் மத மற்றும் சமூக அரசியல் இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது. இதற்கு சிறந்த உதாரணம் அப்துல்கலாமை கூறலாம், இஸ்லாமியர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் கலாமுக்கு குடியரசுத் தலைவர் பதவி வழங்கப்பட்டது என்றே கூறப்படுகிறது. இந்த முறையும் அதேபோல ஒரு இஸ்லாமியரை குடியரசு தலைவராக நியமிக்கவும் பாஜகவிடம் திட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அதனால் கேரள மாநில ஆளுநரான ஆரிப் முகமது கான் பெயர் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் புலர்ந்தர்ஷாஹரை சேர்ந்தவர் ஆர்ப் கான், ராஜீவ் காந்தி அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார். பின்னர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். முத்தலாக், சிஏஏ போன்ற விஷயங்களில் ஆர்ப் கான் பாஜகவுக்கு பாதுகாப்பு கேடயமாக செயல்பட்டு வந்தார் அவர் பாஜகவில் இருந்தாலும் முற்போக்கு சிந்தனை கொண்டவராகவே அவரை பாஜக கருதுகிறது. பாஜக ஆர்எஸ்எஸ் இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில் அதை முறியடிக்க இந்த முறை இஸ்லாமியரான ஆர்ப் கானுக்கு குடியரசுத் தலைவர் பதவி வழங்க பாஜக திட்டம் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேபோல தலித் சமுதாய மக்களை குறிவைத்து தலித் சமுதாயத்தில் இருந்து வந்த ராம்நாத் கோவிந்தை குடியரசு தலைவர் ஆக்கியதும் பாஜகதான். இதுவரை பாஜக குடியரசுத் தலைவராக இஸ்லாமியர், தலித் சமூதாயத்தைச் சேர்ந்தவர்களை அங்கீகரித்துவிட்டது எனவே, அடுத்தது 2024க்கு முன் ஒரு பெண்ணை ஜனாதிபதியாக்க முயற்சிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

அதாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சி காலத்தில் காங்கிரஸ் பிரதீபா பாட்டிலை ஜனாதிபதி ஆக்கியது போல இப்போது ஆனந்திபென் படேல் அவர்களை ஜனாதிபதியாக்கலாம் என்ற எண்ணமும் பாஜகவிடம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஆனந்தி பென்னுக்கு இப்போதே 80 வயது கடந்து விட்டதால் அந்த பதவி அவருக்கு கிடைக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது, அதனால் அந்த இடத்திற்கு தமிழிசை அல்லது பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மர்ம் அவர்கள் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தென்னிந்தியாவில் பாஜக தனது கட்டமைப்பை வலுப்படுத்த தென்னிந்தியாவை சேர்ந்த துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பெயரும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் மோடி பட்டியலில் இல்லாத ஒருவரையும் கூட திடீரென பதவிக்கு முன்மொழிய வாய்ப்பு இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது. அந்த வகையில் இன்னும் சிலரின் பெயர்களும் குடியரசுத் தலைவர் பெயர் பட்டியலில் வரக்கூடும் என்றும் தகவல் வெளியாகிறது.

இந்நிலையில்தான் மராட்டிய மாநிலத்தை குறிவைத்த மராட்டியத்தை சேர்ந்த இருவரை பாஜக தனது பட்டியலில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சரத்பவார் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரின் பெயர் அதில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, குடியரசுத் தலைவர் வேட்பாளர் பெயர் பட்டியலில் நடிகர் ரஜினிகாந்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது எனக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:- குடியரசுத் தலைவர் வேட்பாளரை பொறுத்தவரையில் பல ஆலோசனைகளில் பாஜக உள்ளது. இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒருவரை குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்த வேண்டுமென பாஜக திட்டம் வைத்துள்ளது. அதேபோல் வி.பி சிங்மீது மோடிக்கு நல்ல மதிப்பு உண்டு, ஆனால் அவர் இந்துக்களை பிளவுபடுத்தியவர் என்ற குற்றச்சாட்டு இருப்பதால், மோடி அவரை அங்கீகரிக்கவில்லை. ஆனால் ஆரிப் முகமது கான், ஜெகதீப் சிங் டங்கர், சத்தியபால் மாலிக் போன்ற விபி சிங் ஆதரவாளர்களான ஆட்களுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் ஆர்ப் முகமது கான் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நியமிக்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோல பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மர்ம் பெண் வேட்பாளராக நியமிக்க வாய்ப்புள்ளது, அதேபோல ஜே.பி நட்டாவை குடியரசுத் தலைவராக நியமித்துவிட்டு பாஜக தலைவர் பதவிக்கு பூபேந்தர் சிங் யாதவை நியமிப்பதன் மூலம் உ.பி, பிஹார் போன்ற மாநிலங்களில் யாதவர்கள் வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கும் என்பதால் இந்த திட்டமும் மோடியிடம் உள்ளது. இதையும் தாண்டி ரஜினிகாந்த் அவர்களை மராத்தா என்ற அடிப்படையில் ரஜினிகாந்த்தையோ அல்லது சரத்பவாரையோ குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன் நிறுத்தவும் பாஜகவிடம் திட்டம் இருக்கிறது. இறுதியாக கள்ளிறக்கும் சமுதாயமாக கருதப்படும் நாடார், ஈழவர், கவ்டே, இடிகா, பண்டாரி, ஜெய்ஷ்வா, ஷிவ்கரே, அலுவாலியா என இந்தியா முழுக்க இந்த சமுதாயம் நிறைந்திருக்கிறது. தேசிய அளவில் உள்ள இந்த சமுதாயத்தின் பிரதிநிதியாக மோடிக்கு விசுவாசமிக்கவராக கருதப்படும் தமிழிசையும் அந்தப் பட்டியலில் இருக்கிறார். இவ்வாறு ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார்.