rajini meeting with narendra modi
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து பரபரப்பாக அறிக்கை விடுத்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை அடுத்த சில நாட்களில் சந்திக்க உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசியல் பிரவேசம்
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15-ந்தேதி முதல் 5 நாட்களுக்கு தனது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது நடிகர் ரஜினிகாந்த் ஆண்டவன் நினைத்தால் அரசியலுக்குள் வருவேன். போருக்கு தயாராக இருங்கள்’’ என்று ரசிகர்களிடம் தெரிவித்தார்.

எதிர்ப்பு
நடிகர் ரஜினிகாந்தின் இந்த பரபரப்பு பேச்சால் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது என அவரின் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். அதேசமயம், சில அரசியல் கட்சித் தலைவர்களும் ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
அமித்ஷா வரவேற்பு
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பாரதிய ஜனதா கட்சியில் இணையப் போகிறார் என்று செய்தியும் பரப்பிவிடப்பட்டன. இது குறித்து பாஜனதா கட்சியின் தேசியத் தலைமையும் மறுக்கவில்லை. தேசியத் தலைவர் அமித் ஷா ரஜினிக்காக பா.ஜனதாவின் கதவுகள் திறந்தே இருக்கிறது எனத் தெரிவித்தார்.
மோடியுடன் சந்திப்பு
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது அடுத்த நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் அடுத்த சில நாட்களில் சந்திக்க உள்ளதாக அவரின் ெநருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து நடிகர் ரஜினிக்கு நெருங்கிய நண்பர் ஒருவர்கூறுகையில், “ பா.ஜனதா கட்சியின் தலைமை நேற்று நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து பேசப்பட்டுள்ளது. ஆதலால், அடுத்த சில நாட்களில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடியைச் சந்திப்பார். எப்போது ரஜினிகாந்த் டெல்லிசெல்வார் என்ற தேதி தெரியவில்லை’’ என அவர் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி இடையிலான நட்பு குறித்து பா.ஜனதா மாநிலத் தலைமை அதிகாரப்பூர்வமாக கருத்துக் கூற மறுத்துவிட்டது.
மோடி-ரஜினி ஆலோசனை
அதேசமயம், தமிழக பா.ஜனதாவில் பெயர் வௌியிட விரும்பாத மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “ பிரதம் மோடி, நடிகர் ரஜினிகாந்த் இடையிலான சந்திப்பு அடுத்த சில நாட்களில் நடக்க இருக்கிறது. அப்போது, அடுத்து வரும் மாதங்களில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்படலாம்.

அதிமுக கட்சியில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினை முடிவுக்கு வந்தவுடன், இரு கட்சிகளிடையே கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்புகிறோம். அதிமுகவின் இரு அணிகளும் எந்த விதமான அரசியல் முடிவுகள் எடுத்தாலும், அல்லது தனித்தனியாக எடுத்தாலும் அதை பா.ஜனதா கட்சியைச் சார்ந்தே இருக்கும்.
ஓ.பி.எஸ். தோல்வி
ஓ.பி.எஸ்.க்கு மக்களிடத்தில் ஆதரவு இருக்கும் என எதிர்பார்த்தோம் ஆனால், அவர் தோல்வி அடைந்த தலைவராகிவிட்டார். அதேசமயம் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறந்த திட்டங்கள் வைத்து இருக்கிறார். மீண்டும் ஒன்று பட்ட அதிமுகவை நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஓ.பன்னீர் செல்வத்துக்கு மீண்டும் இணைவததைத் தவிர வழியில்லை’’ எனத் தெரிவித்தார்.
