ஸ்டாலினுக்கு இருக்கிற பஞ்சாயத்துகள் போதாதென்று புது பிரச்னை ஒன்று பல்லைக் காட்டிக் கொண்டு கிளம்பியிருக்கிறது. அது திருநாவுக்கரசர், திருமாவளவன் மற்றும் ரஜினிகாந்த் மூன்று பேரும் தானாக சேர்ந்து உருவாக்கியிருக்கும் தாறுமாறான கூட்டணிதான். 

தமிழக காங்கிரஸின் மாநில தலைவராக இருந்த திருநாவுக்கரசரின் பதவி சமீபத்தில் பறிபோனது. இதற்கு மிக முக்கிய காரணம் ஸ்டாலின் தான் என்பது அரசரின் எண்ணம். காரணம், இருவருக்கும் இடையில் ஆகவே ஆகாது. ஸ்டாலினை தவிர்த்து அ.தி.மு.க.வோடோ அல்லது அ.ம.மு.க.வோடோ கூட்டு வைக்க வேண்டும் என்பதுதான் அரசரின் ஆசை. இதை சரியாக ஸ்மெல் செய்துவிட்ட ஸ்டாலின், அவரைப் பற்றி ராகுலின் கவனத்துக்கு கொண்டு போயி ‘இவர் தலைவரா இருந்தால் நம்ம கூட்டணிக்கு சறுக்கல் உறுதி’ என்று போட்டுக் கொடுக்க, அரசர் தூக்கிக் கடாசப்பட்டார்.

 

தன் பதவி பறிப்பின் பின்னணியில் ஸ்டாலினின் கை இருக்குமென்று துவக்கத்தில் நினைக்கவில்லை அரசர். ஆனால் அவரது டெல்லி சோர்ஸ்களே விஷயத்தை உறுதி செய்த பின்னர் பல்லைக் கடித்துக் கொண்டார். தன் கட்சியை சேர்ந்த இளங்கோவனோ, குஷ்பூவோ தன்னை கவிழ்த்திருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் அடுத்த கட்சி தலைவரின் வேலையால் தன் பதவி பறிபோனதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.  ஸ்டாலினுக்கு சூடாக ஒரு பதிலடியை தந்தே தீரவேண்டும் என்று முடிவெடுத்தார். 

இந்த நேரத்தில்தான் ‘செளந்தர்யா திருமணத்துக்கு அழைப்பிதழ் வைக்க வீட்டுக்கு வர்றேன்!’ என்று போனில் தகவல் தெரிவித்தார் ரஜினி.  ஸ்டாலினுக்கும், ரஜினிக்கு செட் ஆகாது எனும் ஊரறிந்த ரகசியத்தை, அரசரும் அறிந்து வைத்திருப்பதில் ஆச்சரியமில்லை.  அதனால் ரஜினின் வரவை வைத்து எப்படியாவது ஸ்டாலினுக்கு எதிரான தன் ப்ராஜெக்டுக்கு பிள்ளையார் சுழி போட நினைத்தார் அரசர். 

சற்றே யோசித்தவரின் மனதில் திருமாவளவனின் நினைப்பு வந்தது. ஏற்கனவே திருமாவுக்கும், ஸ்டாலினுக்கும் ஆகாது அதிலும் இப்போது கூட்டணியில் தொகுதி எண்ணிக்கை விஷயத்தில் உரசல் உச்சத்தில் இருப்பதாய் தகவல்கள். ஸ்டாலின் மீது கடும் வெறுப்பாகி, ‘நான் சிதம்பரத்தில் நிச்சயம் போட்டியிடுவேன்!’ என்று திருமா கூறியிருப்பதும் அரசரின் நினைவுக்கு வந்து போயின. உடனே திருமாவுக்கு போன் போட்டு தன் வீட்டுக்கு வரச்சொன்னார். 

அவர் ‘என்ன?’ என்று கேட்க, ‘ரஜினி வர்றா. அப்டியே பேசிட்டு இருப்போம். வாங்க தம்பி’ என்றார். திருமாவும் சென்றார். மூவரும் சுமார் ஒரு மணி நேரம் அரசர் வீட்டு தனியறையில் அமர்ந்து பேசினர். இவர்கள் தனியறையில் அமர்ந்து பேசுவதை அரசரின் ஏற்பாட்டின் பேரில் அவரது உதவியாளர்கள் மீடியாவுக்கு பரப்பிவிட்டு, ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு சென்றார்கள். ‘கூட்டணியில் இருக்கும் திருமாவும், அரசரும் சம்பந்தமேயில்லாமல் ரஜினியுடன் என்ன ஆலோசிக்கிறார்கள்? அதுவும் அவர் அழகிரி ஆளாச்சே?’ என்று கண் சிவந்தார் ஸ்டாலின். 

அரசர் வீட்டில் பேசிய மூவரும் பல அரசியல் பிரச்னைகள், போக்குவரத்துகள், தேர்தல் ஆகியன பற்றி பேசினார்களாம். சந்திப்பு முடிந்து வெளியே வந்த ரஜினி ‘என் மகள் திருமணத்துக்கு அழைப்பிதல் கொடுக்கவே வந்தேன். அரசியல் ஒன்றும் பேசவில்லை.’ என்றார். ஆனால் திருநாவுக்கரசரோ ‘நாங்கள் மூவரும் அரசியல் தலைவர்கள் என்பதால் அரசியலைப் பற்றித்தான் பேசினோம்.’ என்று ரஜினி கூறியதற்கு நேர் எதிராக பேசினார். 

இதிலிருந்தே ரஜினிக்கு புரிந்து போனது அரசரின் லாபி. ஆனாலும் அவருக்கும் ஸ்டாலினை ஆகாது என்பதால், சிரித்து ரசித்துவிட்டார். அரசர், காங்கிரஸின் தலைவர் இல்லையென்பதால் இந்த சந்திப்பினால் அவருக்கு எந்த பிரச்னையும் வர வாய்ப்பில்லை. ஆனால்  ஸ்டாலின் தன் ஒட்டுமொத்த கோபத்தையும் திருமா மீதுதான் காட்டப்போகிறார்! என்பதே வி.சி.க்களின் எரிச்சல். 

இதற்கு ஏற்றார்போல் ‘எங்க கட்சியின் திருச்சி மாநாட்டுக்கு வந்து பேசிய திருநாவுக்கரசருக்கு  நன்றி சொல்லத்தான் வந்தேன்.’ என்று திருமா சொல்லியதை ஸ்டாலின் நம்பவில்லை. அரசர் வீட்டு சந்திப்பு பெரிய அரசியல் அக்கப்போரை கிளப்பாமல் அடங்காது போல! ‘ஸ்டாலின் இப்போ மண்டையை பிய்ச்சுட்டு இருப்பாரு, இவங்க மூணு பேரும் என்ன பேசுனாங்கன்னு. இவங்களை ஏன் பகைச்சோமுன்னு அவரு அழணும், வலிக்கணும் அவருக்கு. இந்த மாதிரி அடிக்கடி சந்திப்பு நடக்கும்.’ என்று செம்ம திட்டமே போட்டிருக்கிறாராம். இதெப்டியிருக்கு!?