ரஜினிகாந்தின் பேரன்கள் கூட பெரியவன்களாகி, விபரமறிந்த குழந்தைகளாகி விட்டனர். ஆனால், எப்போதோ ‘நான் அரசியலுக்கு வருவேன். என்னை நம்பியிருக்கும் ரசிகர்களை உயர்த்துவேன்’ என்று சொல்லி  பலப்பல வருடங்கள் கடந்து விட்டன. அவர் சொன்னபடி சட்டமன்ற தேர்தல் பணிகள் துவங்கிட இன்னும் ஒரே வருடம் மட்டுமே இருக்கும் நிலையில், ரஜினிகாந்த் இன்னமுமே கட்சியை துவக்காததும், சமீபத்தில் முடிந்த அவரது பிறந்தநாள் விழாவின் போது ரசிகர்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் எதையும்  சொல்லாததும் மிகப்பெரிய எரிச்சலை அவர்களுக்குள் உருவாக்கியுள்ளது. 

அங்கொன்றும் இங்கொன்றுமாக மறைமுகமாக புலம்பிக் கொண்டிருந்த ரஜினியின் ரசிகர் மன்ற நிர்வாகிகள், இந்த தொடர் ஏமாற்றத்தால் ஓப்பனாகவே புலம்ப துவங்கிவிட்டனர். அதில் கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சவுந்தர்ராஜன் எனும் முன்னாள் நிர்வாகி ரஜினியை போட்டு தாறுமாறாக கிழித்து தொங்கைவிட்டிருக்கிறார். அதன் முக்கிய பாயிண்டுகள் இதோ....

*    எனக்கு தொண்டர்கள் வேண்டாம், அநியாயத்தை தட்டிக் கேட்கும் காவலர்கள் வேண்டும்! என்று ரஜினிதான் சொன்னார். இதனால் ரஜினி மன்றத்தில் நடந்த அநியாயங்களை நான் தட்டிக் கேட்டதால், என்னை மாஜியாக்கிவிட்டனர். 
*  எந்த முடிவிலும் ஒரு உறுதியில்லை ரஜினியிடம். லைக்கா ராஜூ மகாலிங்கத்தை கொண்டு வந்தார்! அதன் பின் கடலூர் டாக்டர் இளவரசன்! பின் மேற்கு வங்க ஐ.பி.எஸ். அதிகாரியான ராஜசேகர்! தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி ஸ்டாலின்! என  எத்தனையோ பேரை களமிறக்கியும் மன்றம் தேறவில்லை. குழப்பங்கள், புகார்கள், ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள். 
*  நெடுங்காலமாக ரஜினியின் ரசிகனாக இருந்து உழைத்தவனை தூக்கி வெளியில் எறிவதே அவரது மன்றத்தின் தலைமை பொறுப்புக்கு வருபவர்களின் வேலை. இதெல்லாம் ரஜினிக்கு தெரியாமல் நடக்கிறது என்று நினைத்தோம். ஆனால் ‘எல்லாமே எனக்கு தெரிந்து நடக்கிறது’ என்று அவரே சொன்னபோது, அசிங்கப்பட்டு போனோம் இவரை நம்பி இருந்ததை நினைத்து. ஆக தனது உண்மை ரசிகர் பாதிக்கப்படுவதை அவரே ரசிக்கிறார். 
*  முப்பத்தைந்து வருடங்களாக படிப்பை, தொழிலை, குடும்பத்தை பார்க்காமல் ரஜினி ரஜினி என்று பைத்தியக்காரத்தனமாக அலைந்ததற்கு பெரிதாய் அசிங்கப்பட்டுவிட்டோம். அட அவரது மன்றம், கட்சியின் நிர்வாகி பதவிகள் கூட இல்லை, ரசிகர் மன்ற உறுப்பினர் பதவி கூட பறிக்கப்பட்ட கொடுமை நடந்தது. இந்த கேவலம் வேறெங்காவது உண்டா?
*  அவர் மன்றத்தின் முக்கால் வாசி ரசிகர்களுக்கு உடலிலும், மனதிலும் பலமில்லை இப்போது. எங்கள் இளமை முழுவதும் ரஜினியால் வீணாகிவிட்டது.
*  தமிழகத்தின் சிஸ்டம் சரியில்லை, அதை மாற்றுகிறேன் என்கிறார். ஆனால் இவரது மன்ற நிர்வாகத்தின் சிஸ்டம் சரியில்லையே! அதை யார் மாற்றுவது? 
*  ரஜினியை நம்பி போன நீங்கள் இழந்தது உயிரை தவிர எல்லாத்தையும்! என்று எங்கள் குடும்பத்து ஆட்களும், உறவுகளும் கேவலமாய் திட்டுகிறார்கள், என்று இன்னும் இன்னும் வறுத்து எடுத்திருக்கிறார் அந்த நபர். இந்த புலம்பல் உண்மையா அல்லது பொய்யா என்பது ரஜினியின் மனசாட்சிக்கு தெரியும். அது உண்மைதான்! என்றால், என்ன செய்யப்போகிறார்?