ரஜினி மக்கள் மன்றத்தின் 3 மாவட்டச் செயலாளர்கள், மகளிர் அணி, வர்த்தகர் அணியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

ரஜினி மக்கள் மன்றத்தின் 3 மாவட்டச் செயலாளர்கள், மகளிர் அணி, வர்த்தகர் அணியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். 

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்த நிலையில், தனது உடல்நலத்தை காரணம் காட்டி அந்த முடிவை கைவிடுவதாக அண்மையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து சமீபத்தில் அனைத்து மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், வருங்காலத்தில் ரசிகர்களுக்கு எவ்வித பொய்யான எதிர்பார்ப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பையே கலைப்பதாகவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். 

இதனையடுத்து, ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்து விட்டு அவர்கள் விருப்பம்போல எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வந்தனர். 

இந்நிலையில், திமுக சிறுபான்மையினர் பிரிவு மாநில இணைச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் ரஜினி மக்கள் மன்றத்தின் 8 மாவட்ட முக்கிய நிர்வாகிகள் அவர்களது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

 இந்நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்றத்தின் 3 மாவட்ட செயலாளர்கள், மகளிர் அணிச் செயலாளர்கள், வர்த்தக அணி, வழக்கறிஞர் அணி மற்றும் இளைஞர் அணி செயலாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் இணைந்துள்ளனர். இதனையடுத்து, ரஜினி மக்கள் மன்றத்தின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஏவிகே ராஜா பேட்டியளிக்கையில்;- தாய் கழகத்தில் இணைந்தது போல் பாசம் இப்போது எங்களுக்கு உள்ளது. மேன்மேலும் எங்கள் பணிகளை சிறப்பாக தொடர்வோம் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன், பத்மபிரியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.