கருணாநிதி இருந்த காலத்திலேயே மேயர் ஸ்டாலினுக்கும், நடிகர் ரஜினிக்கும் ஆகவே ஆகாது! என்பது உலகறிந்த சேதி. இந்த சூழலில், முதல்வராகிட துடிக்கும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கும், அதே முதல்வர் பதவியை குறி வைத்து அரசியலுக்குள் நுழைய இருக்கும் ரஜினியை பிடிக்கும்? 

இருவருக்கும் இடையில் முட்டலும், மோதலும்தானே மிஞ்சும். யெஸ் அதுதான் ஆரம்பமாகி அசுரத்தனமாக சென்று கொண்டிருக்கிறது. கொளத்தூர் பள்ளிக் கல்வெட்டு விவகாரம் இவர்கள் இருவருக்கும் இடையிலான சண்டையின் பக்கா உதாரணம்! என்கிறார்கள்.  அது என்ன பிரச்னை? அதாவது கொளத்தூர் ஜி.கே.எம். காலனியில் செயல்பட்டுவரும் அரசு மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகமானது, வடசென்னை மாவட்ட ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் ஐ.டி.விங் நபர்களிடம் பள்ளிக்காக சில உதவிகள் கேட்டுள்ளனர். உடனே அவர்களும் கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரூபாய் செலவில் மழைநீர் சேமிப்புத் திட்டம், குடிநீருக்கான போர்வெல், கழிவறை சீரமைப்பு, பெயிண்டிங்! என்று பல பணிகளை செய்து கொடுத்துள்ளனர்.  இதன் திறப்புவிழாவையும் நடத்தி, இது தொடர்பாக ஒரு கல்வெட்டையும் திறந்துவிட்டனர். 

அங்கேதான் சிக்கல் துவங்கியது. ’இது தி.மு.க.தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினின் தொகுதி. இங்கே யார் மன்றத்தில் கல்வெட்டு திறக்கிறீர்கள்? உடனே அதை தூக்குங்கள்.’ என்று தொடர்ந்து மிரட்டல்கள் வந்ததாம். பள்ளிக்கூடத்தில் அரசியல் வேண்டாம்! என்று கல்வெட்டை அகற்றிய ரஜினி மன்றத்தினர், கவ்லெட்டு இருந்தபோது, அதை அகற்றிய பின்பு என இரண்டு போட்டோக்களை எடுத்து, சோஷியல் மீடியாவில் போட்டு ‘எங்கள் தலைவரின் அரசியலால் பயப்படுகிறார் ஸ்டாலின். இதனால் நாங்கள் செய்யும் நற்பணிகளை தடுக்கும் தி.மு.க.’ என்று பட்டாசு பற்ற வைத்துவிட்டனர். 

இதில் டென்ஷனான தி.மு.க.வோ “அடேய், காமெடி பண்ணாதீங்க. கட்சியே துவங்காத உங்களைப் பார்த்து, பல முறை ஆண்ட, அடுத்து ஆளப்போற நாங்க ஏன் டா பயப்படணும்? உங்க தலைவர் சினிமாவில் மட்டுமில்ல பொதுவாழ்விலும் ஒரு நடிகர்னு உலகத்துக்கே தெரியும். உங்க உழைப்பையும், வயசையும், பணத்தையும் தின்னுட்டு கோடி கோடியாய் சம்பாதிச்சிருக்கிறார் அந்த மனுஷன். எங்கள் தலைவர் ஸ்டாலின், எம்.எல்.ஏ. எனும் முறையில் தன் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு வாரம் ஒரு தடவையாவது வந்து நல்ல காரியங்களை செய்துட்டு போறார். பல லட்சக்கணக்கில் அவர் செய்யும் பணிகளுக்கே கல்வெட்டு வைக்கிறதில்லை. ஆனால் மேலோட்டமா ஏதோ பூச்சு வேலை பார்த்துட்டு, நீங்க கல்வெட்டு ஸீன் போட்டிருக்கீங்க. 

அதை பிரபலமாக்க, எங்க பெயரை இழுக்குறீங்க. இந்த கொளத்தூர் தொகுதியில முந்நூறுக்கும் மேலே தி.மு.க. நிர்வாகிகள் இருக்காங்க. உங்களை மிரட்டுனது யாருன்னு இதுல ஒருத்தனை கூடவா அடையாளம் தெரியலை? ஆள் பேரைச் சொல்லியே புகார் கொடுக்க வேண்டிதானே? இந்த ரஜினி டீமோட வேலையே இதானுங்க. தி.மு.க. எம்.எல்.ஏ.க்களோட தொகுதியா பார்த்து ஏதாவது சின்னதா வேலைகளை பார்க்குறது, அப்புறம் இப்படி கல்வெட்டு அதுயிதுன்னு பில்ட்- அப் பண்றது. அதை பிரபலப்படுத்த, எங்களை வம்புக்கு இழுக்குறதுன்னு இருக்காங்க. ஸ்மால் பாய்ஸ்.” என்று செம்ம காண்டாக பதிவிட்டுவிட்டனர்.

ஆனால் ரஜினி டீமோ இதை மறுத்து “மிரட்டியவரை அடையாளம் தெரிந்தால் நாங்கள் சொல்ல தயங்கமாட்டோம். ஸ்கூல் ஹெட்மாஸ்டரை மிரட்டியுள்ளனர். வட சென்னையில் மட்டும் ஆயிரத்து அறுநூறு நிகழ்ச்சிகள் நடத்தி, மக்களுக்கு நன்மைகள் செய்துள்ள எங்களைப் பார்த்து ஸீன் போடுறோம்!ன்னு நக்கல் பேசும் தி.மு.க. நிச்சயம் வீழும்.” என்கிறார்கள். 
ப்பார்றா பஞ்சாயத்த!