இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் தமிழகத்தில் இருக்கும் மாமல்லபுரத்தில் 2 நாட்கள் சந்தித்து இரு நாட்டு உறவுகள் தொடர்பாக உரையாட உள்ளனர். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரையில் செய்யப்பட்டிருக்கிறது. சாலைகள், முக்கிய இடங்கள் ஆகியவை தூய்மைபடுத்தப்பட்டு புதுப்பொலிவுடன் ஜொலிக்கிறது.

நாளை பிற்பகல் ஒன்றரை மணியளவில் சென்னை வரும் சீன அதிபர் மாலை 4 மணி அளவில் மாமல்லபுரம் செல்கிறார். அங்கு அர்ஜுனன் தபசு பகுதியில் பிரதமர் மோடி சீன அதிபரை வரவேற்கிறார். அங்கிருந்து வெண்ணை திரட்டி பாறைக்கு செல்லும் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் பின்னர் ஐந்து ரதம் பகுதிக்கு சென்று வரலாற்று சின்னங்களை பார்வையிட உள்ளனர். அதன்பிறகு கடற்கரை கோவிலுக்கு செல்லும் அவர்கள் அங்கு நடைபெறும் கலை நிகழ்ச்சிகளைக் காண உள்ளனர்.

இந்தநிலையில் மாமல்லபுரத்தில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. நாளை மாலை 6 மணி அளவில் கடற்கரை கோவிலில் நடைபெற இருக்கும் கலைநிகழ்ச்சிகளை இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பார்வையிட உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்திற்கும்  அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. அழைப்பு வந்திருப்பதை தொடர்ந்து அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.