படத்துக்கு இன்னும் பூஜையே போடவில்லை அதற்குள் 100வது நாள் வெற்றிவிழா நடத்திட துடிப்பது போல், ரஜினி இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை ஆனால் அதற்குள் ‘வெறும் ரசிகர்களை மட்டும் வெச்சு ஆட்சியை பிடிச்சிட முடியுமா?’ என்று ரஜினி மக்கள் மன்றத்தில் அமைப்புச் செயலாளர் டாக்டர். இளவரசன் கொளுத்தியுள்ள கமெண்ட் சூப்பரின் ரசிகர்களை சூடேற்றி போராட தூண்டியுள்ளது. 
பிரச்னை இதுதான்...

ரஜினி மக்கள் மன்றத்தின் அமைப்புச் செயலாளராக இளவரசன் நியமிக்கப்பட்டதில் இருந்து கடும் சர்ச்சைகள்தான். பல மாவட்டங்களில் நிர்வாகிகள் அதிரடி மாற்றம், புதிய நிர்வாகிகள் நியமிப்பதில் சண்டைகள் என்று வரிசை கட்டி நிற்கின்றனர் பிரச்னைகள். அதிலும் குறிப்பாக, நெடுங்காலமாக ரஜினியின் ரசிகர்களாகவும், ரசிகர் மன்ற நிர்வாகிகளாகவும் இருந்து அவரது படத்தை வெற்றி பெற வைத்ததோடு, அவரது பெயரை சொல்லி பல லட்சங்களை செலவு செய்தவர்களை பதவியிலிருந்து தூக்கியுள்ளதுதான் பெரும் பிரச்னையை கிளப்பியுள்ளது. 

இந்நிலையில் இளவரசனை அந்தப் பதவியில் ஒடுக்கி உட்கார வைத்துவிட்டு, லதா ரஜினிகாந்தே நிர்வாகத்தை கையில் எடுக்கிறார் என்றும் தகவல்கள் வந்தன. 

இந்நிலையில் இந்த சர்ச்சைகள் குறித்து விரிவாக வாய் திறந்திருக்கிறார் இளவரசன். அப்போதும் வாயில் வாஸ்து சரியில்லாமல் அவர் பேசிய விஷயங்கள் மீண்டும் ரஜினி மக்கள் மன்றத்தில் பெரும் மண்டையிடியை துவக்கியுள்ளன. 

அப்படி என்ன சொன்னார் இளவரசன்....” முப்பது வருடங்களுக்கு மேல் ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களை நீக்கியது சரியா? என்று கேட்கிறார்கள். என்ன பண்ணுவது? வெறும் ரசிகர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சியை பிடித்துவிட முடியுமா? 

ரசிகர்கள் யார்? தலைவர் ரஜினியின் படம் வரும்போது பேனர் கட் அவுட் வைப்பார்கள், டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று லாபம் பார்ப்பார்கள். மற்றபடி இந்த முப்பது ஆண்டுகளில் தலைவரால் நடுத்தெருவுக்கு வந்ததாக யாராவது சொல்ல முடியுமா? 
நாங்கள் ரசிகர்களை நீக்கவில்லை, மன்றத்தில் செயல்படாதவர்களைத்தான் நீக்கியுள்ளோம். 

முப்பது வருடங்கள் மன்றத்தில் இருந்தவர்கள் என்பதால் அதை அரசியலுக்கான தகுதியாக பார்க்க முடியாது. முப்பது வருடம் மன்றத்தில் இருந்தவர்களால் ஒரு மாவட்டத்தில் ஆறேழு தொகுதிகளை ஜெயிக்க வைக்க முடியுமா? அதனால்தான் மற்ற கட்சி ஜாம்பவான்களை எதிர்த்து நின்று கட்சியை கரைசேர்க்க வேண்டி வசதி படைத்தவர்களை நியமிக்க வேண்டியது அவசியமாகிறது. 

உண்மையான உழைப்பாளி இங்கேதான் இருக்கிறான். போலிகள்தான் வெளியேற்றப்படுகின்றனர்.” என்று போட்டுத் தாக்கியிருக்கிறார். 

இதைக் கேட்டு ஒட்டு மொத்த ரஜினி ரசிகர் படையும் கொந்தளித்துவிட்டது. ‘ஆக கட்சி நடத்துவதற்கு பணமும், பண பலம்  படைத்தவனும்தான் முக்கியம் என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டீர்கள். தலைவர் ரஜினியோட ஒப்புதலோடதானே இந்த வார்த்தையை சொல்லியிருக்கீங்க இல்லையா! அவருக்கு தெரியாம நீங்க இப்படி பேசியிருக்க வாய்ப்பே இல்லை. 

அட்ரா சக்க! கட்சி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ‘பணம்தான் பிரதானம்’ அப்படின்னு நிரூபிச்சிட்டீங்க. இனிமே கட்சியாரம்பிச்சு மாவட்ட செயலாளர்களையும் பணத்தை வெச்சு போடுவீங்க, தேர்தல்ல வேட்பாளர்களையும் பணம் இருக்கிறவனா பார்த்து நிருத்துவீங்க. தேர்தல்ல ஜெயிக்க மக்களுக்கு பணம் கொடுக்க கூட தயங்க மாட்டீங்க. கேட்டால், ‘வெறும் நேர்மையை வெச்சு எப்படி ஆட்சியை பிடிப்பது?’ன்னு கேட்பீங்க. 

ஒரு வேளை ஆட்சிக்கு வந்து தொலைஞ்சீங்கன்னா, விட்ட காசை பிடிக்க கொள்ளையடிப்பீங்க. ஆக உங்களுக்கு இந்த மாநிலத்தை இதுவரையில் நாசமாக்கிட்டு இருக்கிற திராவிட கட்சிகளுக்கும் என்னய்யா வித்தியாசம். ‘

கட்சி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே பணமே முக்கியம்!ன்னு பேசுறதுக்கு வெட்கமா இல்லையா? பணக்காரனைப் பார்த்துதான் மக்கள் ஓட்டு போடுவானுங்கன்னா, அப்போ ரஜினி செல்வாக்குங்கிறது வெறும் மாயையா? வெட்கம்!” என்று பொங்கி எழுந்துள்ளனர். இந்த விவகாரம் இன்னும் பூதாகரமாக வெடிக்கும், இப்போதைக்கு அடங்காது போலிருக்கிறது. 

ரஜினி இப்போ எந்தா எட்டில் இருக்கிறாரோ? பாவம் நிம்மதியே இல்லை.