ஏனுங்க இங்கே குஷ்பு, குஷ்புன்னு ஒரு கதர் சேலை பொண்ணு இருந்துச்சே, எங்கேங்க அது? என்று கவுண்டர் ஸ்டைலில் நக்கல் அடிக்கப்படும் நிலைக்கு காங்கிரஸில் தள்ளப்பட்டுவிட்டார் குஷ்பு. இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது கிட்டத்தட்ட துணை தலைவர் ரேஞ்சுக்கு அலப்பறையை கூட்டிய குஷ்ஷை, அரியணை ஏறிய நாளி லேயே துடைத்து தூக்கி வெளியே வீசிவிட்டார் திருநாவுக்கரசர்.  

குஷ்புவால் அரசர் கோஷ்டியின் ஆரவாரங்களை தாண்டி சத்தியமூர்த்தி பவனுக்குள் வந்து லாபி செய்யவும் முடியவில்லை, அதற்காக கட்சியே வேண்டாமென்று விலகவும் முடியவில்லை. தேற வழியில்லாமல் தேங்கி, தேம்பி நிற்கிறார். இந்நிலையில் திருநாவுக்கரசரை தலைவர் பதவியில் இருந்து மாற்றிட கோரி கிட்டத்தட்ட வாராவாரம் ஒரு டீம் டெல்லிக்கு காவடி தூக்கிக் கொண்டே இருக்கிறது. அந்த விமானத்தில் இளங்கோவன் முதல் சீட்டில் இருந்தால், குஷ்பு மூணாவது சீட்டிலாவது இருக்கிறார். இதில் சமீப அதிசயமாக விஜயதரணி எம்.எல்.ஏ.வும் இணைந்திருக்கிறார்.  

இது இளங்கோ மற்றும் குஷ்ஷை குஷியாக்கியது. ஆனால் தரணியோ ‘எனக்கும் இலக்கு திருநாவுக்கரசரின் பதவி பறிப்புதான். ஆனா நான் உங்க அணியில்லை.’ என்று தடாலடியாக அறிவித்துவிட, அவர்களோ அப்செட். ஆனாலும், எப்படியோ பொது எதிரி ஒழிந்தால் சரி, என்று போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசரை இப்போதைக்கு மாற்றும் எண்ணமே ராகுலிடம் இல்லை. இதனால் இந்த சென்னை டு டெல்லி விமான சேவை மீது கடும் கடுப்பானவர் ‘ஏன் அநாவசியமா வந்து வந்து தொல்லை பண்றாங்க?’ என்று முகுல் வாஸ்னிக்கிடம் கேட்டுவிட்டார். பதறிய வாஸ்னிக் இந்த அதிருப்தியாளர்களை வறுத்தெடுத்துவிட்டார். ‘யாரை எப்போ எப்படி மாத்தணும்னு தலைவருக்கு தெரியும். நீங்க அடிக்கடி தொல்லை பண்ணாதீங்க!’ என்று நேரடியாகவே கேட் போட்டுவிட்டார். 

இதனால் ஏமாற்றத்தின் உச்சத்துக்கு போய்விட்டது அதிருப்தி டீம். ஆனால் இளங்கோவன் அமைதியாக கிளம்பிவிட்டாராம். ஆனால் குஷ்பு, விஜயதரணி இருவருக்கும்தான் மனம் ஆறவில்லை. குஷ்புவுக்கு ஏற்கனவே வாஸ்னிக்கிடம் நல்ல அறிமுகம் இருக்கிறது. அதனால் சில நிமிடங்கள் பேச அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியவர் தரணியையும் அழைத்துக் கொண்டு போய், “அரசர் டீமோட அட்ராசிட்டிகளை தாண்டி மற்ற அணியினர் அங்கே இயக்க வேலையை பார்க்க முடியலை. கட்சி அலுவலகத்துக்குள்ளே கூட நுழைய முடியலை. 

அரசரை மாற்றாதது உங்க விருப்பம். ஆனால் இவ்வளவு நாங்கள் சொல்லியும் பலனில்லை, அதனால் நாங்க கட்சி மாறும் முடிவுக்கு தள்ளப்பட்டாலும் ஆச்சரியமில்லைஜி. எங்களை தப்பா நினைக்க வேணாம் தலைமை.” என்று கடைசி முயற்சியான ‘கட்சி தாவல்’ ஆயுதத்தையும் பயன்படுத்திவிட்டு வந்துவிட்டார்களாம். இதை அரசர் அணி ஸ்மெல் செய்துவிட்டு ஸ்வீட் எடுத்து கொண்டாடாத குறையாய் குஷியாகி இருக்கிறது. சத்தியமூர்த்தி பவன் தாண்டி வெளியேயும் பரவ துவங்கிவிட்டது இந்த தகவல். 

குஷ்புவை இழுக்க கமல், ரஜினி இரு கட்சிகளும்  முயலுகின்றன. தாரணியின் ஐடியாவோ கடும் அதிருப்தி எம்.எல்.ஏ.வாக தொடர்ந்து விலவங்கோட்டில் சுயேட்சையாக நின்றாலும் ஜெயிக்கும் நிலையை உருவாக்குவது என்று நினைக்கிறார். ஆனால் தினகரன் கட்சி தரப்பில் இருந்து அவருக்கு தூதுகள் பறப்பதையும் மறுப்பதற்கில்லை. காங்கிரஸின் இரண்டு பெண் ஆளுமைகளின் முடிவு சரியா என்பதே விவாதமாக போய்க் கொண்டிருக்கிறது.