ரஜினியின் அரசியல் பிரவேசம் பின்னணியில், பாரதிய ஜனதா கட்சி இருக்கிறதோ என்ற அச்சம் உள்ளதாக இயக்குநர் அமீர் கூறியுள்ளார். கமல் அரசியலுக்கு வருவதாக சொன்னதும் எதிர்ப்பு தெரிவித்த பாஜக, ரஜினி அரசியலுக்கு வருவதாக சொன்னதும் பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது என்றும் அமீர் கூறியுள்ளார்.

பெருத்த எதிர்பார்ப்புக்கு இடையே கடந்த டிச.31ம் தேதி தாம் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் கூறினார் ரஜினி காந்த். இவ்வாறு தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த ரஜினியின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் பல தரப்பில் இருந்தும் கிளம்பியது. 

சினிமா உலகத்தைச் சேர்ந்தவர் என்பதால், திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்கள் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். சீமான், அமீர் உள்ளிட்ட சிலர் ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து வரும் வேளையில், அவரின் ஆன்மிக அரசியல் அறிவிப்புக்கு இயக்குனர் விசு தனது ஆதரவைத் தெரிவித்தார். 

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ஆரம்பம் முதலோ எதிர்ப்பு தெரிவித்து வருபவர் இயக்குநர் அமீர். பாஜகவின் முகமாகத்தான் ரஜினி இருப்பார் என்று அமீர் தொடர்ந்து கூறி வந்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது புதிய இந்தியா பிறக்கப்போகிறது வாழ்த்துக்கள் என்று ரஜினி கூறியதற்கும் இயக்குநர் அமீர் கண்டனம் தெரிவிதிருந்தார்.

இந்த நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு அமீர் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மத, இன, பேதமற்ற ஆன்மீக அரசியல் என்று ரஜினி தெளிவாக தனது ஆன்மீக அரசியலைப் பற்றி சொல்லிவிட்டார். இதற்கு பிறகு தனது கொள்கையை பற்றி ரஜினி என்ன வெளிப்படையாக சொல்ல வேண்டும்? என்று அமீரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இதையெல்லாம் சொல்லிவிட்டு அவர் ஏன் அடுத்த நாள் ராமகிருஷ்ணா மடத்துக்கு சென்றார் என்பதில்தான் கேள்வி எழுகிறது என்று கூறினார்.

மேலும் பேசிய அமீர், ஏற்கனவே தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக, ரஜினியை பயன்படுத்துகிறதோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. அர்ஜூன் சம்பத் போன்றோர்கள், காவிச்சூரியன் இங்கு மலரும் என்று சொன்னதால் அந்த அச்சம் இருப்பதாக கூறினார். கமல் ஹாசன், அரசியலுக்கு வருவதாக சொன்னதும் அரிஹரசர்மா, தமிழிசை சௌந்தரராஜன் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், ரஜினி அரசியலுக்கு வருவதாக சொன்னதும், தமிழிசை, ஹெச். ராஜா, ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் ஆதரவு தெரிவித்க்கின்றனர். இதனால் பாஜகவின் பின்னோட்டம் இருக்கிறதோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுவதாக அவர் கூறினார்.

மக்கள் நாளை ஆட்சிக்கு ரஜினியை தேர்ந்தெடுத்துவிட்டால்? என்ற கேள்விக்கு பதிலளித்த அமீர், அவருடைய வார்த்தையேதான் நான் திரும்பி சொல்கிறேன் என்றவர், தமிழகத்தை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது என்றார்.