ரஜினிகாந்தின் விருப்பத்திற்கு மாறாக அவரைக் கட்சி ஆரம்பிக்கக் கூறியவர்கள், அழுத்தம் கொடுத்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "தமிழக அரசு, பொங்கல் பண்டிகைக்கு ரூபாய் 2,500 வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில், இதனை அதிமுக கட்சி வழங்குவதுபோல் தோற்றத்தை ஏற்படுத்துவது ஊழலை விட மோசமானது. எனவே, இதனை அரசு அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் 30 ஆயிரம் பேருக்கு 5 கிலோ அரிசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

நடிகர் ரஜினி, தன் உடல் நிலையைக் காரணம் காட்டி கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மருத்துவர்கள் எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார். ஓராண்டுக்கு முன்பு நான் ரஜினியைச் சந்தித்தபோது அவர் அரசியலில் ஈடுபட ஆர்வம் இருப்பதாகக் கூறினார். தற்போதைய நிலையில் அவருக்கு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரது விருப்பத்திற்கு மாறாக அவரைக் கட்சி ஆரம்பிக்கக் கூறியவர்கள், அழுத்தம் கொடுத்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவே கருதுகிறேன். இதில் குறிப்பாக சங் பரிவார், ஆர்எஸ்எஸ் அமைப்புகள் ஏமாற்றம் அடைந்துள்ளன.

இதனால் அதிமுகவை உடைக்கும் எண்ணத்தில் இருந்தவர்களுக்குப் பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளது. அதிமுகவும் தற்காலிகமாகத் தப்பித்துள்ளது. ரஜினி கட்சி ஆரம்பித்தாலும், ஆரம்பிக்காவிட்டாலும் திமுக கூட்டணிக்குப் பாதிப்பு இருக்கப்போவதில்லை’’என அவர் தெரிவித்தார்.