நான் அரசியலுக்கு வருவது உறுதி. போருக்குத் தயாராகுங்கள் என ரஜினி வெளிப்படையாக முழக்கமிட்டு மூன்றாண்டுகள் முடிய உள்ளது. ஆனாலும் அவர் வருவாரா..? மாட்டாரா..?  என்கிற சந்தேகம் அவரது ரசிக கண்மணிகளை ஆட்டிப்படைத்தது. தேர்தல் நெருங்க நெருங்க அந்தபதற்றம் இன்னும் தொற்றிக்கொண்டது. இப்போது இல்லையென்றால் இனி எப்போதும் இல்லை என ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி பொங்கித் தீர்த்து விட்டனர். 

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ரஜினியின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இனிதான் ரஜினிகாந்த் புலிப்பாய்ச்சல் காட்டப்போகிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் அவரது அரசியல் இன்னும் வேகம் எடுக்கப்போகிறது. நவம்பரில் கட்சி தொடங்குவதும், அவரே முதல்வர் வேட்பாளராக களம் காண்பதும் உறுதி என்கிறார்கள்.

 

மாநாடு தொடங்கி அதில் ரஜினி தனது திட்டங்களை அறிவிக்கும் முடிவில் இருக்கிறார். அதற்கான அறிக்கைகள் தயார் நிலையில் உள்ளன. வரும் நவம்பரில் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். மாநாடு வேலூர் அல்லது மதுரையில் நடை பெறலாம் எனக் கூறுகிறார்கள். அதற்கு முன்பாக மாநாட்டுக்கான தேதி அடுத்த மாதம் முதல் வாரத்தில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படலாம்.  ஏற்கெனவே தனது ஆதரவாளர் ஒருவர் பெயரில் ஒரு கட்சியை பதிவு செய்து இருக்கிறார் ரஜினி. எனவே அந்தக் கட்சியை கைபற்றியோ, அல்லது அந்தக் கட்சியில் இணைந்தோ அரசியலில் களமிறங்கக் காத்திருக்கிறார். அது தொடர்பான அறிவிப்பு மாநாட்டில் வெளியிடத்திட்டமிட்டுள்ளனர்.

முதல்வர் வேட்பாளர் என்பதால் நிச்சயம் அவர் தேர்தலில் போட்டியிடுவார். அப்படி போட்டியிட்டால் கிருஷ்ணகிரி, சோளிங்கர், திருவண்ணாமலை, மதுரை ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளார். இப்போதைக்கு ரஜினி இந்த 4 தொகுதிகளை தேர்வு செய்து வைத்துள்ளார். யாரும் எதிர்பாராத விதமாக சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் கூட அவர் களம் இறங்கலாம் எனக் கூறுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.