விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருச்சியில் நடத்திய தேசம் காப்போம்  மாநாட்டில் கலந்து கொண்டதற்காக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை , சென்னை அண்ணா நகரிலுள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று திருமாவளவன் நன்றி தெரிவித்தார்.

அவர்கள்  சந்திப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் அங்கு வந்தார்.  தனது மகள் சவுந்தர்யா திருமண அழைப்பிதழை திருநாவுக்கரசரிடம் வழங்கி, திருமணத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். தொடர்ந்து திருமாவளவனுக்கும் அவர் அழைப்பிதழை வழங்கினார். அப்போது ரஜினிக்கு திருமாவளவன் பொன்னாடை அணிவித்தார். 

கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு மேலாக இந்த சந்திப்பு நடந்தது. அப்போது மூவரும் தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்தும் பேசினர். 
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ரஜினிகாந்த் என்னுடைய 40 ஆண்டுகால நெருங்கிய நண்பர். அவருடைய மகள் சவுந்தர்யாவுக்கு வரும் 11ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதால், அதற்கான அழைப்பிதழ் வைக்க என்னுடைய இல்லத்திற்கு வந்தார். நீண்ட நாட்கள் கழித்து பார்த்ததால் தமிழக நிலவரங்கள், அரசியல் சூழ்நிலைகள், நாட்டு நடப்புகள் குறித்து பேசினோம் என தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், திருநாவுக்கரசர் மூலமாகத்தான் சௌந்தர்யாவின் திருமணம் நிச்சயம் ஆனது. அந்த நன்றியால் அவருக்கு முதல் திருண அழைப்பிதழை அளித்ததாக தெரிவித்தார். இந்த சந்திப்பில் அரசியல நோக்கம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.