கடந்த சில மாதங்களாகவே ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் நீக்கப்பட்டு வந்தார்கள். ரஜினிக்கு தெரியாமல் இந்த நீக்கம் இருந்ததாக மன்றத்தில் இருந்து விலக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி வந்தனர். அதைத் தொடர்ந்து ரஜினி வீட்டை அவர்கள் முற்றுகையிட்ட நிகழ்வும் நடந்தது. 

கடந்த 23 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ரஜினி மன்ற நியமனங்கள், மாற்றங்கள், தற்காலிக மாற்றங்கள் எல்லாமே தனக்கு தெரிந்துதான் நடக்கிறது என்று அதில் கூறியிருந்தார். ரஜினியின் இந்த அறிக்கையால், அவரது ரசிகர்கள் மேலும் கொதிப்படைந்தனர்.

 

இந்த நிலையில்தான், நடிகர் ரஜினிகாந்த், மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். நீக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் மீண்டும் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், கடந்த 23 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கசப்பான உண்மையை வெளியிட்டிருந்தேன். கசப்பான உண்மையையும், நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு நன்றி என்று கூறியிருந்தார். 

ஆனால் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்வது குறித்து எந்தவித தகவலும் வெளியிடவில்லை. உங்களைப் போன்ற ரசிகர்களை பெற்றதற்கு பெருமைப்படுவதாக கூறிய ரஜினி, நீக்கப்பட்ட ரசிகர்கள் பற்றி எந்தவித தகவலும் வெளியிடாதது வேதனை அளிப்பதாக உள்ளது என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.