தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பழநியில் செய்தியாளார்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஆவின் நிறுவனம் பால்கொள்முதல் செய்ததற்கான நிலுவைத்தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுப்பொருள் தொகுப்புடன் 100 மில்லி ஆவின் நெய்யும் சேர்த்து வழங்கப்படும். அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால்தான் கூட்டணியில் அங்கம் வகிக்க முடியும்.


புதிதாக அரசியலுக்கு வருவோர் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆட்சி அமைப்போம் என்றுதான் சொல்கிறார்களே தவிர, கருணாநிதி ஆட்சி அமைப்போம் என யாரும் சொல்லமாட்டார்கள். நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படைத்தன்மை உள்ள நல்லமனிதர். அரசியலுக்கு வருவதில்லை என்று அவர் எடுத்த முடிவை மனதார ஏற்கிறேன். நடிகர் ரஜினிகாந்த் சகல செளபார்க்கியமும் பெற்று நீண்ட நாள் வாழ வேண்டும். ரஜினிகாந்த் ரசிகர்கள் யாரும் திமுகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள். திமுகவுக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள். இனி திமுக ஆட்சி வரவே வராது” என்று கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.