பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே பதவிகள் அள்ளி வழங்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள திண்டுக்கல் மாவட்ட ரஜினி  ரசிகர்கள், ஏற்கனவே மன்ற நிர்வாகியாக நியமிக்கப்பட்ட தம்பிராஜை நீக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக கடந்த 15–ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் மாவட்ட பொறுப்பாளராக அரவிந்தும், செயலாளராக தம்புராஜூம்  நியமிக்கப்பட்டனர். 

இந்த நிலையில் பட்டியல் வெளியான 7 நாட்களிலேயே மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்ட தம்புராஜை ரஜினி மக்கள் மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்வதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.ஆர். அரவிந்த், மாவட்ட செயலாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.தம்புராஜ் நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட, நகர, பேரூராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் 149 பேர் கூண்டோடு  ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

ரஜினி மக்கள் மன்றத்தைப் பொறுத்தவரை பணம் இருந்தால்தான் பதவி என்றும், அவர்களுக்பே முன்னுரிமை வழங்கப்படவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனாலும் தாங்கள் அனைவரும் ரஜினி மக்கள் மன்ற  உறுப்பினர்களாக தொடர்வோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

இந்த 149 பேரும் ரஜினி காந்த்தை நேரில் சந்தித்து தங்களது  ராஜினாமா கடிதத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கட்சி தொடங்காத நிலையில் பதவிகளுக்காக ரசிகர்கள் அடித்துக் கொள்வது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.