டெல்லி கலவரத்துக்கு மத்திய அரசின் உளவுத் துறை சரியாக செயல்படாததே காரணம் என்று நடிகர் ரஜினி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சிஏஏ சட்டத்தால் முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டால்தான் முதல் ஆளாக நிற்பேன் என்று நான் சொல்லியிருந்தேன். டெல்லியில் நடைபெறும் கலவரத்துக்கு உளவுத்துறையின் தோல்விதான் காரணம்.  ட்ரம்ப் போன்ற தலைவர்கள் வந்திருக்கும் நேரத்தில் இந்த வன்முறை நிகழ்ந்து இருக்கக் கூடாது. மத்திய அரசின் உளவுத்துறை சரியாகச்  செயல்படாததையே இதைக் காட்டுகிறது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.


 சிஏஏ போராட்டத்தை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும். இனியாவது வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இல்லையென்றால் ராஜினாமா செய்ய வேண்டியதுதான். போராட்டம் எப்போதும் வன்முறையாக மாறக் கூடாது, அமைதியாக நடைபெறலாம்.


என்னதான் போராட்டங்கள் நடந்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்ன போராடினாலும் மத்திய அரசு இந்தச் சட்டத்தை திரும்பப் பெறாது என்றே நான் நினைக்கிறேன். சில கட்சிகள் மதத்தை வைத்து அரசியல் செய்வதையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என ரஜினி தெரிவித்தார்.