ரஜினியால் நல்ல ஆட்சியை தமிழகத்தில் கொண்டுவர முடியும் என்று அவருடைய சகோதரர் சத்திய நாராயண ராவ் தெரிவித்துள்ளார். 
 நடிகர் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயண ராவ் கெய்க்வாட்  தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் உள்ள காலபைரவர் கோயிலுக்கு இன்று வருகை தந்தார். கோயிலில் நடைபெற்ற கலச பூஜையில் பங்கேற்றார். இக்கோயிலில் ரஜினியின் பெயரில் சிறப்பு அர்ச்சனையை சத்திய நாராயணராவ் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.


 “கடந்த ஆண்டு இந்தக் கோயிலுக்கு வந்தேன். கடவுள் அருளால் தற்போது மீண்டும் இக்கோயிலுக்கு வந்துள்ளேன். ரஜினியும் அவருடை குடும்பத்தினரும் நீண்ட ஆயுளுடன் இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து இந்த யாகத்தை நடத்தினோம். ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார். மக்களுக்கு நல்லதை செய்வார். ரஜினி மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். ரஜினி ஆட்சிக்கு வந்தால், நிச்சயம் நன்றாக ஆட்சி செய்வார். அவர் மற்ற எதற்கும் ஆசைப்படாதவர்.


எந்த ஓர் எதிர்பார்ப்பும் அவரிடம் இல்லை. மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று மட்டுமே விரும்புபவர். ரஜினி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார். மக்கள் பிரச்னை எதுவாக இருந்தாலும் அதை நேரடியாக சந்தித்து தீர்வு காண்பார். அவரால் ஒரு நல்ல ஆட்சியை தமிழகத்தில் கொண்டுவர முடியும். அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து ரஜினி விரைவில் அறிவிப்பார்.” என்று சத்ய நாராயண ராவ் தெரிவித்தார்.