ரஜினிகாந்த் அரசியல் குறித்த முடிவு அவரின் தனிப்பட்ட உரிமை, அதை விமர்சனம் செய்வதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அது முறையானதும் அல்ல என திமுக பொருளாளர் டி.ஆர் பாலு கூறியுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பான வீயூகங்களிலும் அரசியல்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக-திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வழக்கம்போல தற்போதைய தேர்தல் பிரச்சாரங்களை துவக்கி ஒருவரை மாற்றி ஒருவர் கடுமையாக விமர்சித்து தாக்கி வருகின்றனர். 

இதனால் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர் அதில் இருந்து பின்வாங்கி உள்ளதால் வழக்கம் போல அதிமுக-திமுக இடையே நேரடி போட்டி நிலவும் சூழல் உருவாகி இருக்கிறது. இந்நிலையில் சிவகங்கையில் தேர்தல் பணிகள் குறித்து கழக நிர்வாகிகளிடம் கேட்டறிந்த திமுக பொருளாளர் டி.ஆர் பாலு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, திமுக வாரிசு அரசியல் செய்துவருவதாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மேடைதோறும் பேசி வருகின்றனர். குறிப்பாக வாரிசு அரசியல் என்று முதலமைச்சர் பேசுவது  துணை முதல்வர் மகன் ரவீந்திரநாத்தை குறிப்பிட்டுத்தான் என விமர்சித்தார். 

அதேபோல் ரஜினிகாந்த்  அரசியல் கட்சி ஆரம்பிப்பதில் இருந்து பின் வாங்கியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நடிகர் ரஜினிகாந்த் எனக்கும் தலைவர் தளபதி அவர்களுக்கும் நெருங்கிய நண்பர். அவர் எங்களது நலன் விரும்பியும் கூட,  ரஜினிகாந்த் தனது சொந்த விருப்பத்தில் அரசியலை விட்டு செல்வதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளது. ஆகவே அதை சரியா? தவறா? என மற்றவர்கள் ஆராயக்கூடாது. அதற்கு மற்றவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றார்.  ரஜினி கட்சி ஆரம்பிக்க அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டி.ஆர் பாலு, இது அனைவரும் அறிந்த உண்மை தான் என்று கூறினார்.