கடந்த 2017ம் ஆண்டு, ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த காவலாளியின் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள்,அதைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளிகள் இறந்தது, என அனைத்துக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் தான் காரணம் என தெஹல்கா செய்தி நிறுவனத்தின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மாத்தியூஸ் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்த ஆவணப்படம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆவணப்படத்தை வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. ஆனால் இதற்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என  முதலமைச்சர் மறுத்துள்ளார்.

மேலும் சாமுவேல் மாத்தியூஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி ஒரு ஈயை கூட அடிக்க மாட்டார் என கூறியுள்ளார். அவர் மீது  இப்படி பழியை சுமத்துவது தமக்கு ஆச்சரியம் அளிப்பதாக குறிப்பிட்டார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நல்லாட்சியை கலைக்க சிலர் திட்டமிட்டே இதை செய்துள்ளனர். முதலமைச்சரை எதிர்க்க யாருக்கும் இங்கு திராணி கிடையாது. திராணி, தெம்பு இல்லாதவர்கள், இதுபோன்ற பொய் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். ஈயை கூட அடிக்கமாட்டார் எடப்பாடி பழனிசாமி. அவரா கொலை செய்ய போகிறார்?" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.