விருதுநகரில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளரும் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில், “இந்தக் காலத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது. ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர் ஆகிய சமூகவலைதளங்களை பயன்படுத்தி கழகதத்தின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதற்காக திறமையான நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.


தமிழக அரசு மீது பொய்யான விமர்சனங்களை திமுகவினர் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் மூலம் வைக்கிறார்கள். எனவே, திமுகவின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் நமது தகவல் தொழி்ல் நுட்ப பிரிவு நிர்வாகிகள் செயல்பட வேண்டும். இந்தத் தொழில்நுட்பங்களை நாம் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது சமூக இணையதளங்களில் வரும் தகவல்கள்தான் மக்களை எளிதில் விரைவாக சென்றடைகிறது. அதனால்தான் பிரசாந்த் கிஷோர் என்ற கூட்டத்தை திமுக காசு கொடுத்து கூட்டி வந்துள்ளது.


காசு கொடுத்து வேலை செய்ய ஆட்களை திமுக அழைத்து வந்தாலும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். 2021-ம் ஆண்டில் தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழகமே ஆட்சி அமைக்க அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி்கள் திறமையாக செயல்பட வேண்டும். படித்த இளைஞர்கள் அதிமுக மீது பற்று கொண்ட துடிப்புமிக்க இளைஞர்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவில் நிர்வாகிகளாக நியமிக்கப்படுவார்கள்.” என்று கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.