வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் சங்கை இன்னும் கொஞ்சம் நசுக்கி பிடித்திருந்தால் சோலி முடிஞ்சி போயிருக்கும் என்று தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடியாக பேசியுள்ளார். 
அதிமுகவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டங்களை நடத்திவருகிறார்கள். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில்  உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய பாலவளத் துறை அமைச்சர்  கே.டி ராஜேந்திர பாலாஜி வழக்கம்போல் அதிரடியாகப் பேசினார்.
 “தற்போது பிரிந்து போனவர்கள் அதிமுகவுக்கு வந்துவிட்டார்கள்.  அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். இவ்வளவு பெரிய கட்சி என்றால் சண்டை இருக்காதா? அண்ணன் தம்பிகளுக்கு இடையே சண்டை நடப்பது போல அதிமுகவிலும்  நடந்தது. பிரிந்தவர்கள் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பிவிட்டார்கள்.

 
உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புவபர்கள் விருப்பமனுக்களைப் பெற்றுசெல்கிறார்கள். தேர்தலில் வசதி வாய்ப்பு இல்லாத வயதானவர்களுக்கு சீட் கொடுக்க முடியாது. இது கம்யூட்டர் காலம். அதனால் இளைஞர்களுக்கு சீட்டு கிடைக்கும். திமுக என்ற கட்சி அழிந்து வருகிறது. அந்தக் கட்சியில் உள்ளாட்சித் தேர்தலில் சீட் கேட்கவே ஆள் இல்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.  ஆனால், வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் சங்கை நசுக்கி பிடித்தோம். விட்டா போதும் என்று 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் இன்னும் சங்கை இறுக்கி பிடித்திருந்தால் சோலி முடிஞ்சி போயிருக்கும். அதிமுக ஜெயித்திருக்கும். வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களிடம் மத பிரச்னையைத் தூண்டி விட்டு திமுக வெற்றி பெற்றது. தற்போது இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் அதிமுக பக்கம் உள்ளார்கள். அவர்கள் அதிமுகவுக்குதான் வாக்களிப்பார்கள்” என ராஜேந்திர பாலாஜி பேசினார்.