சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த ராஜேந்திர பாலாஜியின் மாவட்ட செயலாளர் பதவியை பறிக்கபட்ட நிலையில் அமைச்சர் பதவியையும் பறிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனால் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முக்கியமானவர் அவர் எப்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். சமீபத்தில் `மோடி எங்களது டாடி’ என்று ஆரம்பித்தவர் ஒருகட்டத்தில் குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் இஸ்லாமியர்களை கடுமையாக விமர்சித்து தொடர்ந்து கருத்துகளை கூறிவந்தார். அப்போதே ஆளும் தலைமை அவர் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. குறிப்பாக அமைச்சரவை கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் சிலரே ராஜேந்திர பாலாஜியின் பேச்சினால் சிறுபான்மை சமூகத்தினர் நம்மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்று முதல்வரிடம் தொடர்ந்து புகார் அளித்தனர். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அவரை அழைத்து கண்டித்தார். 

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி திருச்சி பாஜக பிரமுகர் விஜய ரகு கொலை வழக்கு குறித்து பேசும் போது இஸ்லாமியர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனுக்கும் இடையே கட்சியில் பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர் ஒருவரை அமைச்சரின் ஆதரவாளர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கிவரும் நிலையில் நேற்று மாலை ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்து வழிபாடுகளை கிண்டல் செய்தவர்களுக்கு ஒரு பாடம் என்று கொரோனா நோய் குறித்து பதிவிட்டார். இந்த ட்வீட் பதிவு உடனே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, ட்வீட் செய்த 2 மணிநேரத்தில் ராஜேந்திர பாலாஜியின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இன்னும் கோவம் தீராத முதல்வர் எடப்பாடி சட்டப்பேரவை கூட்டத் முடிந்த பிறகு அவரது ராஜேந்திர பாலாஜியின் அமைச்சர் பதவியும் விரைவில் பறிக்கப்படலாம் என்று தெரிகிறது.