திமுக ’மம்மி’ சொல்லலாம்.. நாங்க ’டாடி’ சொல்லக்கூடாதா..? எகிறியடிக்கும் அதிமுக அமைச்சர்..!
திமுகவினர் அன்னை இந்திரா காந்தி எனச் சொன்னார்கள். நாங்கள் மோடியை டாடி அதாவது தந்தை என்று சொன்னால் தவறா? என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுகவினர் அன்னை இந்திரா காந்தி எனச் சொன்னார்கள். நாங்கள் மோடியை டாடி அதாவது தந்தை என்று சொன்னால் தவறா? என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்.
அருப்புக்கோட்டையில் விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ’’கோமாளிகள் இல்லையென்றால் நாடகம் எடுபடாது. எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி. தேர்தல் முடிந்த பிறகு கோமாளி யார் ஏமாளி யார் என்பது தெரியும். அதிமுக ஜனநாயக கூட்டணி. திமுக ரெளடி கட்சி. ராதாரவியைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஸ்டாலின் இருந்தார். மனதில் வைத்துக்கொண்டே பழிவாங்கும் எண்ணம் கொண்டவர் ஸ்டாலின். சமயம் பார்த்து அவரை ஸ்டாலின் பழிவாங்கிவிட்டார்.
ஜெயலலிதா இருந்தபோதே ஓ.பி.எஸ் மகனுக்கு இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. தி.மு.க.வில் 3-வது தலை முறையாக ஸ்டாலின் மகன் வந்திருக்கிறார். இனி அவர்கள் வீட்டில் இருக்கும் எல்லாரையும் கொண்டுவந்துவிடுவார். அதிமுகவில் உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்படும்.
எத்தனை காலத்திற்குத்தான் டி.டி.வி தினகரன் அவரது தொண்டர்களை ஏமாற்றுவார் என்று பார்ப்போம். ஜெயலலிதா இறந்து போனதற்கு காரணமே திமுகதான். அவர்கள் போட்ட பொய் வழக்கில் மனம் நொந்துபோய்தான் ஜெயலலிதா இறந்தார். திமுக ஆட்சிக் காலத்தில் யாராவது தொழில் செய்ய முடியுமா? ஒரு பத்திரம்தான் பதிய முடியுமா? கவுன்சிலர்கள் அடாவடி வசூல் செய்வார்கள். ஆனால், அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைதி நிலவும்.
மோடியை டாடி என்று கூறுவது எப்படி தவறாகும்? இந்திராவை அவர்கள் அன்னை என்று கூறவில்லையா? நாங்களும் இந்திராவை அன்னை என்றுதானே கூறுகிறோம். சி.பா.ஆதித்தனாரை தமிழர் தந்தை என்று கூறுகிறோம். மோடி தேசத்தை பாதுகாப்பவர். அவரைத் தந்தை (டாடி) என்று கூறுவதில் தவறில்லை. எங்கள் கூட்டணி மதசார்பற்ற கூட்டணி. ஆனால், மதசாயம் பூசுக்கிறார்கள். பி.ஜே.பி. ஆட்சி காலத்தில் தான் அப்துல்கலாம் ஜனாதிபதியாக்கப்பட்டார். ஜார்ஜ் பெர்னான்டஸ் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்” என்று அவர் கூறினார்.