நடிகர் கமலஹாசன் சிங்கத்துடன் மோதுகிறார் எனவும், அவரின் குரல் உரிமை குரல் கிடையாது எனவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஊழல் அதிகரித்திருப்பதாகவும், சிஸ்டம் சரியில்லை எனவும் கமலஹாசன் அண்மை காலங்களில் விமர்சித்து வந்தார். 

அதன்படி தற்போது 3 டுவிட்களை பதிவு செய்துள்ளார். அதில், எனது குரலுக்கு வலு சேர்க்க யாருக்கு துணிச்சல் உள்ளது எனவும், தமிழ்நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே எமது இலக்கு எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும், ஒரு மாநிலத்தில் ஊழல், துயர சம்பவங்கள் நடந்தால் மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், ஊழலில் இருந்து நாம் இன்னும் சுதந்திரம் பெறாத நிலையில் நாம் இன்னும் அடிமைகளே எனவும் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகர் கமலஹாசன் தேவையில்லாமல் சிங்கத்துடன் மோதுகிறார் எனவும், அவரின் குரல் உரிமை குரல் கிடையாது எனவும் தெரிவித்தார். 

தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கத்துடன் வாழத்தெரியாத கமலஹாசன் எடப்பாடி பழனிசாமி  ஆட்சியில் என்ன குறையை கண்டார் என ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பினார். 

விஸ்வரூபம் திரைப்பட பிரச்சனையில் அதிருப்தியில் அவர் உள்ளதாகவும் ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.