சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் ஒட்டபட்டிருந்த போஸ்டரில் சசிகலா படத்தை கிழித்த அதிமுக தொண்டரை பொது இடத்தில போலீசாருடன் சேர்ந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிமுக பொது செயலாளர் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவருடைய இறப்பில் யாரையும் வைத்து பார்க்க தொண்டர்கள் தயாராக இல்லை.

அதிமுக பொது செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை கட்சி தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதே நேரம் முதல்வராக ஒபிஎஸ் செயல்படுவதை யாரும் எதிர்க்கவில்லை.

சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அவருக்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை தொண்டர்கள் கிழிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

சில போஸ்டர்களில் சாணியும் அடிக்கப்பட்டது. ஜெயலலிதா வென்ற ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் சசிகலா போட்டியிடுவார் என்று கூறப்பட்டது.

ஆனால் அங்குதான் அவருடைய போஸ்டர்கள் பேனர்கள் அதிகம் கிழிக்கப்ட்டது.

இதற்கிடையில் திருவொற்றியூர் தண்டயார்பேட்டை ஆர் .கே.நகர் பகுதியில் போஸ்டர்களை கிழித்த ஒரு நபரை கட்சிக்கார்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

சசிகலாவுக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று எம்எல்ஏக்கள் கூட்டம் கூடுவதாக இருந்தது.

இதில் சசிகலா முதல்வராக பொறுப்பேற்கலாம் என்ற கருத்தும் நிலவியது.

இந்நிலையில் முதலவர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வசிக்கும் கிரீன்வேஸ் சாலையில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை ஆதரித்து ஏகப்பட்ட போஸ்டர்கள் ஒட்டபட்டிருந்தது.

இதில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் வீட்டு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கட்சி தொண்டர் ஒருவர் சசிகலாவின் முகத்தை மட்டும் கிழித்து கொண்டிருந்தார் இதை பார்த்த கட்சிகாரர்கள் அவரை பிடித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பலர் முன்னிலையில் அந்த தொண்டரை பிடித்து சரமரியாக தாக்கினார். அவருடன் தனி பாதுகாவலர் மற்றும் மயிலாப்பூர் க்ரைம் ஏட்டு ஒருவரும் தாக்கினர்.

இதில் அந்த தொண்டர் நிலைகுலைந்து போனார்.

நானும் அதிமுக காரன்தான் அம்மாவுக்கு இப்படி துரோகம் பண்றீங்களே என்று அடிவாங்கி கொண்டே திருப்பி கேட்டார்.

அவரை சரமாரியாக தாக்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்னர் அபிராமபுரம் போலீசில் ஒப்படைத்தார்.

அமைச்சரே சாலையில் இறங்கி சாதாரண தொண்டனை தாக்கியது தொலைகாட்சிகளில் வாட்ஸ் -அப் களில் வைரலாகி வருகிறது.

தவறு செய்தவரை பிடித்து போலீசில் ஒப்படைக்காமல் பொது இடத்தில அமைச்சரும் அவரது பாதுகாவலரும் தாக்குவது என்ன நியாயம் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

இதனால் பயந்து போன அமைச்சர் புகார் எதையும் தரவில்லை. அதே நேரம் தாக்கப்பட்ட புகார் கொடுத்தால் வழக்கு பதிவு செய்யக்கூடாது என்று போலீஸ் உயரதிகாரிகளுக்கு கட்டளை இட்டதாக கூறப்படுகிறது.

அமைச்சரால் தாக்கப்பட்டவர் தேனீ மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த பாண்டியன்.