அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க தனக்கு 5 நாட்கள் இடைக்கால அவகாசம் வேண்டி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க தனக்கு 5 நாட்கள் இடைக்கால அவகாசம் வேண்டி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மோசடி வழக்கு

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவினில் பணி வழங்குவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவானார். தொடர்ந்து, 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தவரை தமிழக தனிப்படை காவல்துறையினர் கர்நாடகாவில் கைது செய்தனர். இதனையடுத்து, முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராஜேந்திர பாலாஜி விசாரணை நடைபெறும் மாவட்ட காவல் எல்லைக்கு வெளியே செல்லக் கூடாது. காவல் நிலையத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

நிபந்தனை ஜாமீன்

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்தது. அதில், ஜூன் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ள அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி வழங்க வேண்டும். குறிப்பாக, விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருப்பதால் அதில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அதனால் முன்ஜாமீன் வழங்கப்பட்டபோது விதிகப்பட்ட நிபந்தனைகளை நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு தளர்த்தி அனுமதி வழங்க வேண்டும். மேலும், இந்த காலகட்டத்தில் எனக்கான மருத்துவப் பரிசோதனைகளையும் முடித்துக் கொள்வேன் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க தடை

இந்நிலையில், வழக்கு கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, ஹீமா கோலி முன்னிலையில் நடைபெற்றது. ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜராகி அதிமுக கட்சியின் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். ஆகையால், ஜாமீன் நிபந்தனைகளில் 5 நாட்கள் மட்டும் தளர்வு வழங்க வேண்டும். இதுதொடர்பாக மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, நீதிபதி ஹீமா கோலி, கட்சியின் பொதுக்குழுவில் கலந்துகொள்ளவில்லை என்றால் ஒன்றும் ஆகிவிடாது. மேலும், இதுதொடர்பான மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டும் இந்த அமர்வில் விசாரிக்க முடியாது எனக் கூறி அவரது கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.