நல்ல முகூர்த்தம் பார்த்து சேர்ந்த அற்புதமான தம்பதிதான் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி என்றும், திமுக கூட்டணியோ விவகாரத்தான தம்பதி என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

ஸ்ரீவில்லிபத்தூரில் தென்காசி மக்களவை தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை அறிமுகம் செய்யும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி 24 கட்சிகளை சேர்த்துக்கொண்டு, பிரதமர் வேட்பாளராக 24 பேரை சொல்லி ஓட்டு கேட்கிறார்கள். பா.ஜ.க. கூட்டணியினர் மட்டுமே மோடியை மீண்டும் பிரதமராக்குவோம் எனக்கூறி வாக்கு கேட்கிறோம் என்றார். 

நல்ல முகூர்த்தம் பார்த்து சேர்ந்த அற்புதமான தம்பதிதான் அ.தி.மு.க. தலைமையிலான மெகா கூட்டணி. இந்த கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது. திமுக கூட்டணி விவாகரத்து பெற்ற கூட்டணி. திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்கெனவே விவாகரத்தாகிவிட்டது. விவாகரத்து பெற்றவர்கள் எப்படி ஒன்று சேர்ந்து குடும்பம் நடத்த முடியும்? என கேள்வி எழுப்பினார். இந்தியாவின் சர்தார் வல்லபாய் படேலுக்கு பின்பு இரும்பு மனிதர் பிரதமர் மோடி தான். அவர் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றால்தான் நாடு பாதுகாப்பாக இருக்கும். 

மேலும் தங்க தமிழ்ச்செல்வன் தேர்தல் முடிவதற்குள் வெளியேறி விடுவார். இன்னும் கொஞ்சம் நாளில் அமமுகவுக்கு மூடுவிழா நடத்திவிட்டு அங்கிருக்கும் தொண்டர்கள் அதிமுகவுக்கு வந்துவிடுவர் என்று ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.