ராஜஸ்தான் அரசுக்கு எதிராக செயல்பட்ட புகாரில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. பின்னர், சச்சின் பைலட் தனக்கு 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருப்பதாக கூறியதுடன், காங்கிரஸ் சட்டமன்றக் குழு கூட்டத்தையும் புறக்கணித்தார். இதனையடுத்து, கொறாரா உத்தரவு பிறப்பித்தும் சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ப. சிதம்பரம் போன்ற தலைவர்கள் சச்சின் பைலட்டுடன் பேசி சமரச முயற்சி மேற்கொண்டனர். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை. 

இதையடுத்து,  சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக இருந்த 2 அமைச்சர்கள் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர்.  மேலும், ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் மற்றும் துணை முதல்வர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டு, கோவிந்த் சிங் நியமனம் செய்யப்பட்டார். அத்துடன் சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் பணியில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.

இதனிடையே, பாஜகவுக்கு வந்தால்  சச்சின் பைலட்டை வரவேற்போம் என தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், நான் பாஜகவில் இணைய மாட்டேன். டெல்லியில்  தலைமை பதவிகளில் உள்ளோரின் மனதில் நஞ்சை கலக்க சிலர் நான் பாஜகவில் இணைய இருப்பதாக கூறிவருகிறார்கள் என்று கூறினார். 

இந்நிலையில், காங்கிரஸ் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்காத சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக 2 நாளில் விளக்கம் அளிக்காத பட்சத்தில் எம்எல்ஏ பதவி பறிக்கப்படும். இதனால், ராஜஸ்தான் அரசியலில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.