கட்சியை நினைத்து கவலைப்படுகிறேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட விஷயம் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

ராஜஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மாநில சட்டப்பேரவை மொத்தமுள்ள 200 இடங்களில் தற்போது 107 உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் நிலையில் சில சுயேச்சைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போன்ற சில கட்சிகளும் காங்கிரசுக்கு ஆதரவு அளித்து உள்ளன.

காங்கிரஸ் வெற்றி பெற்ற போதும், அங்கு  முதல்வர் பதவியை பெறுவதில் மூத்த தலைவர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே கடும் போட்டி நிலவியது. இதனையடுத்து, ஒருவழியாக அசோக் கெலாட்டை கட்சி மேலிடம் முதல்வராக தேர்வு செய்தது. சச்சின் பைலட்டுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இதனால், இருவருக்கும் ஆரம்பத்தில் இருந்தே அதிருப்தியில் இருந்து வந்தார். 

இந்நிலையில், துணை முதல்வர் சச்சின் பைலட் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு 25 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும் தெரிகிறது. இன்று தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை இன்று சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் டுவிட்டர் பதிவில்;- காங்கிரஸை நினைத்து வருத்தமாக இருக்கிறது. ராஜஸ்தானில் நடக்கும் குழப்பத்துக்கு விரைந்து தீர்வு காணுங்கள். எப்போது கட்சியின் தலைமை விழித்துக்கொள்ளப் போகிறது? லாடத்திலிருந்து குதிரைகள் அனைத்தும் தப்பி ஓடியபின்புதான் விழித்துக்கொள்ளப் போகிறோமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.