ராஜாஜி ஹால் முழுவதுமாக போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 10 நாட்களாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 27 மற்றும் 28ம் தேதிகளில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை தேறியது. எனினும் மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் இருப்பதற்காக மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கருணாநிதியின் உடல்நிலை வழக்கத்தை விட மோசமான சமயத்தில், கடந்த 27ம் தேதி ராஜாஜி ஹால் சுத்தம் செய்யப்பட்டு, விளக்குகள் சரி செய்யும் பணிகள் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அது வழக்கமான பணிதான் என கூறப்பட்டது. 

கடந்த 5 நாட்களாக கருணாநிதியின் உடல்நிலை சீராக இருந்த நிலையில், இன்று மீண்டும் மோசமடைந்துள்ளது.கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் உடல் உறுப்புகளை இயக்க வைப்பதே சிரமமாக உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனால் தொண்டர்கள் பதற்றமடைந்தனர். கடந்த வாரத்தை போலவே மீண்டும் ஏராளமான தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜாஜி ஹால் முழுவதும் போலீஸின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ராஜாஜி ஹால் பகுதிக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ராஜாஜி ஹால் போலீஸின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.