நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு வருவதில் எந்த தடையும் இல்லை எனவும் அவர் வரக்கூடாது என வெளியான வதந்திகளில் உண்மை இல்லை எனவும் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார் .  இது குறித்து ட்விட்டரில்  பதிவிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.   கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை வடக்கு  மாகாண சபையின்முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடிகர் ரஜினிகாந்தை போயஸ் தோட்டத்தில் அவரது  இல்லத்தில் சந்தித்துப் பேசினார் .  அவர் தனிப்பட்ட முறையில் சந்தித்திருந்தாலும் அது அரசியல் ரீதியான சந்திப்பு என பரபரப்பாக பேசப்பட்டது .

அப்போது  பல்வேறு விஷயங்கள் குறித்து நடிகர் ரஜினியுடன் பகிர்ந்துகொண்ட விக்னேஸ்வரன் ,  கட்டாயம் ஒருமுறை இலங்கைக்கு வர வேண்டும் என ரஜினிக்கு அழைப்பு  விடுத்தார் ,  ரஜினியும் அதை ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியான நிலையில் ரஜினி இலங்கைக்கு வர கூடாது எனவும், அரசியல் நோக்கத்தோடு அவர் இலங்கைக்கு வருவதை இலங்கை அரசு அனுமதிக்காது எனவும் இலங்கை தடை விதித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவின .  இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும்  கொந்தளிப்பை ஏற்படுத்தியது .  இந்நிலையில்  இத்தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளார் இலங்கை அரசு . 

ரஜினி இலங்கை வர தடை என்ற செய்தி முற்றிலும் தவறானது என விளக்கம் அளித்துள்ளது,  இந்நிலையில்   இதே கருத்தை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே ,  ரஜினி இலங்கைக்கு வருவதில் எந்த தடையும் இல்லை , அதுகுறித்து  வரும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை ,  நானும் எனது தந்தையும் ரஜினிகாந்த் திரைப்படங்களின்  ரசிகர்கள் .  அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம் ,  அவருக்கு ஒரு தடையும் இல்லை என கூறியுள்ளனர்