இராஜா முத்தையா மற்றும் பெருந்துறை மருத்துவக் கல்லூரிகளை அரசே ஏற்றுக் கொண்ட பிறகும் அங்கு மாணவர்களுக்கு பழைய கல்விக் கட்டணமே வசூலிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. உடனே அரசு அதை தடுக்க வேண்டும் என்பதுடன்,வசூலித்த கட்டணத்தை மீண்டும் மாணவர்களிடமே திருப்பி தர வேண்டும் எனவும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் இரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-   

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தை, 2013 ல் சட்டமன்றத்தில் சட்டம் கொண்டுவந்து தமிழக அரசே ஏற்றுள்ளது. இப்பல்கலைக் கழகத்துடன் இணைந்திருந்த ,இராஜா முத்தையை மருத்துவக் கல்லூரி ,கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படும் என தமிழக அரசு, சட்டமன்றத்தில் ஏற்கனவே அறிவித்தது. அது தற்பொழுது கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.

இன்னிலையில் , இக்கல்லூரியில்  தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட கூடுதலான கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட  2.5 மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது கண்டனத்திற்குரியது. கடந்த 16 ஆண்டுகளில் ரூ 2600 கோடிக்கும் மேல் அப்பல்கலைக் கழகத்திற்கு தமிழக அரசு மானியம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் அரசால் வழங்கப்பட்ட  ஒட்டு  மொத்த மானியத்தை விட இது அதிகம். ஒவ்வொரு ஆண்டும் ரூ 200 கோடிக்கும் மேல் மானியம் வழங்கப்படுகிறது. இவ்வளவு அதிகமான தொகையை அப்பல்கலைக்கழகத்திற்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து  வழங்கிய பிறகும், இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும்  மருத்துவ மாணவர்களிடமிருந்து தொடர்ந்து மிக அதிகமாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில்.எம்.பி.பி எஸ் மாணவர்களுக்கு ரூ 5 லட்சத்து 54 ஆயிரமும், பி.டிஎஸ் மாணவர்களுக்கு 3 லட்சத்து 40 ஆயிரமும், முதுநிலை டிப்ளமா படிப்புக்கு ரூ  8 லட்சமும், முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு ரூ 9.8 லட்சமும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதே சமயம், தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ரூ 13,600ம், பல் மருத்துவப் படிப்பிற்கு ரூ 11,600 ம், முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு ரூ 32,500 ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதிக அளவிலான கட்டணத்தால், இக்கல்லூரியில்  பயிலும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே அங்கு படிக்க முடியும் என்ற நிலையை தமிழகஅரசு உருவாக்குகிறது. 

இது சமூக நீதிக்கும், ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலன்களுக்கும் எதிரானது. இதர தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் என்ன கட்டணமோ, அதே கட்டணத்தை மட்டுமே, இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணங்களை மாணவர்களிடம் திருப்பி வழங்கிட வேண்டும். அதே போன்று, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள சாலை போக்குவரத்துக் கழக மருத்துவக் கல்லூரியையும், சென்ற ஆண்டே தமிழக அரசு நேரடியாக ஏற்றுக் கொண்டுவிட்டது. அங்கும் ஏற்கனவே நடைமுறையில் இருந்த, பழைய கட்டணமான ரூ 3.85 லட்சமே கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவும் சரியான செயல் அல்ல. எனவே, இம் மருத்துவக் கல்லூரியிலும், இதர அரசு மருத்துவக் கல்லூரிகளில் என்ன கட்டணமோ, அதை மட்டுமே வசூலிக்க வேண்டும் என அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.