பாஜக இரண்டாம் முறையாகி பதவியேற்ற உடன் ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டங்களை கொண்டு வந்தது. இதற்காக ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணி உள்ளிட்ட பயணிகளின் பாதுகாப்பு தொடர்புடைய அனைத்து பிரிவுகளும் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டது. அதன்படி சுகாதார பணிகள் அனைத்தும் தற்போது தனியார் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. 

இந்நிலையில்தான் ரயில் நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு கொடுப்பதற்காக நிலைய இயக்குநர்கள் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது.  இதன்படி நியமிக்கப்படும் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு தொழிலாளர் சட்டப்படி உரிய சம்பளம், பி.எப். இ.எஸ்.ஐ. ஆகியன வழங்குவதில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே நாடுமுழுவதும் ஐம்பது ரயில் நிலையங்கள் மற்றும் 150 ரயில்களை தனியார் மயமாக்கும் பணியைத் மத்திய அரசு தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, மத்திய அரசின் ரெயில்வே அமைச்சகம் ‘பியூச்சர் ரோடு மேப்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்ட அறிக்கையில் ரயில்வே துறையை நவீன மயமாக்குதல் என்ற பெயரில் அனைத்து பிரிவுகளையும் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, பயணிகள் சொகுசு ரயில்களான ராஜதானி மற்றும் சதாப்தி ரெயில்களை தற்போது சோதனை அடிப்படையில் தனியாருக்கு குத்தகைக்கு விடப்போவதாக அந்த திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. படிப்படியாக தேஜஸ், பிரிமீயம் ரெயில்களை தனியாருக்கு குத்தகைக்கு விட உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.


 
இதற்கு வெகுவாக எதிர்ப்புகள் எழுந்த போதும்  தில்லி - லக்னோ வழித்தடத்தில் இயங்கும் தேஜஸ் அதிவேக ரெயில் தனியார் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது.  தற்போது மேலும் 150 ரெயில்கள் மற்றும் 50 ரெயில் நிலையங்கள் தனியாரிடம் ஒப்பந்த முறையில் ஒப்படைக்கப்பட உள்ளன.

இந்த பணிகளை மேற்கொள்வதற்காக உயர் அதிகாரம் கொண்ட சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்தக் குழுவில் நிதி ஆயோக் குழும தலைமை அதிகாரி அமிதாப் காண்ட், இந்திய ரயில்வே வாரிய தலைவர் வி.கே யாதவ் தவிர பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை  செயலாளர் ஆகியோரும் இடம்பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.