கூவத்தூரில் சட்டசபையா நடக்கிறது? அல்லது அதிமுக அலுவலகம் இயங்குகிறதா? நீங்கள் சொல்லும் கதையை நான் கேட்க வேண்டுமா என்று மாவட்ட எஸ்.பி.முத்தரசியிடம் மேலதிகாரிகள் கோபித்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நடவடிக்கை வேகப்படுத்தபட்டுள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சசிகலா ஆதரவு உறுப்பினர்கள் சென்னை கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கவைக்கபட்டுள்ளனர்.
இவர்கள் தங்கள் அதரவு எம்.எல்.ஏக்கள் என்று சசிகலா தரப்பு கூற அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஓ.பி.எஸ் தரப்பினர் புகார் அளிக்க பரபரப்பு தொற்றி கொண்டது.

இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் மனோரஞ்சிதம், சண்முகநாதன் உள்ளிட்டோர் தாங்கள் மிரட்டி அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்க அந்த புகார் கவர்னரிடம் கொண்டு செல்லப்பட்டது.
அதிமுக எம்.எல்.ஏ கீதா மற்றும் மற்றொரு எம்.எல்.ஏவை மீட்டு தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இதுபற்றி விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
டி.எஸ்.பி மற்றும் வட்டாட்சியர் தலைமையில் கூவத்தூரில் விசாரித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கப்பட்டது.
அங்கு யாரும் மிரட்டபடவில்லை என கூறியதாக காஞ்சிபுரம் எஸ்.பி முத்தரசி அறிக்கை அளித்தார்.

அவர் அறிக்கை அளித்த சில மணி நேரத்தில் மதுரை தெற்கு எம்.எல்.ஏ சரவணன் கூவத்தூரில் இருந்து தப்பி ஓடிவந்து ஓ.பி.எஸ்ஸிடம் ஐக்கியமானார்.
கூவத்தூர் ரிசார்ட்டில் தான் அடைத்து வைக்கபட்டிருந்ததாகவும் அவர் பேட்டியளித்தார்.
மாவட்ட எஸ்.பி. சரியான தகவலை அளிக்கவில்லை என புகார் எழுந்தது. இதேபோல், பத்திரிக்கையாளர்கள் குண்டர்களால் தாக்கப்பட்டபோது எஸ்.பி அதுகுறித்து அலட்சியாமாக பதில் அளித்தார்.
நேற்று காலை எம்.எல்.ஏக்களை வெளியற்ற போலீசார் முயன்ற போது அவர்களை அமைச்சர்கள் மிரட்டினர்.
இந்நிலையில் நேற்று இரவு டி.ஜி.பி மற்றும் கமிஷனரை அழைத்த ஆளுநர் கூவத்தூரில் என்னதான் நடக்கிறது? அங்கு தனி ராஜ்ஜியம் நடக்கிறதா? 144 தடை உத்தரவு போட்டபிறகும் அங்கு எப்படி ஆட்கள் குவிந்திருக்கிறார்கள்? எப்படி தாக்கபடுகிரார்க்கள்? என்று வறுத்தெடுத்து விட்டார்.
இதையடுத்து காவல்துறை மேலிடம் நடவடிக்கை எடுக்காமல் போக்கு காட்டி வந்த முத்தரசியை அழைத்து செம்ம டோஸ் விட்டதாக கூறப்படுகிறது.

144 தடை உத்தரவு போட்டு போலீஸ் உயரதிகாரிகள் அதிரடிப்படை எல்லாம் இருந்தும் என்ன செய்கிறீர்கள்? எம்.எல்.ஏக்கள் அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக புகார் வருகிறது என கேட்டபோது, அவர்கள் விருப்பத்துடன் தான் அங்கு இருக்கிறார்கள் என சொல்லவும் என்ன கதை சொல்கிறீர்கள்.

நீங்கள் சொல்வதை நான் கேட்கவேண்டுமா? அங்கு எம்.எல்.ஏக்கள் இருக்க சட்டசபையா நடக்கிறது? அல்லது கூவத்தூர் ரிசார்ட் அதிமுக தலைமை அலுவலகமா? அடியாட்கள் சூழ மது பரிமாறி ஆட்டம் பாட்டம் அங்கு நடக்கிறது. என கேட்டுள்ளார்.
இதற்கு முத்தரசி பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து போனாராம். உரிய நடவடிக்கை எடுங்கள் என்று கூறி உயரதிகாரி போனை வைத்து விட்டாராம்.
இதையடுத்து தான் இன்று போலீசார் கூவத்தூரில் குவிக்கப்பட்டுள்ளனராம்.
