காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதியில் 4-வது முறையாக களமிறங்கியிருக்கிறார் ராகுல் காந்தி. உத்தரப்பிரதேசத்தில் அவர் தொடர்ந்து போட்டியிட்டுவரும் நிலையில், தென் இந்தியாவிலும் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்திவந்தனர். இந்நிலையில் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
ராகுல் வயநாட்டில் போட்டியிடுவதை கேரள மாநில காங்கிரஸும் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக கேரள மாநில காங்கிரஸ் மூத்த ட் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிட ஒப்புக்கொண்டிருப்பதாக” தெரிவித்திருக்கிறார். இதேபோல முன்னால் முதல்வர் உம்மன் சாண்டியும் ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிட இருப்பதாக பேட்டி அளித்துள்ளார். உம்மன்சண்டி மற்றும் ராமச்சந்திரனின் பேட்டிகள் வெளியாகியுள்ள நிலையில், கேரளாவில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகவல் கேரள மாநில காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்லாமல், நீலகிரி தொகுதியில் உள்ள தொண்டர்களுக்கும் உற்சாகம் அளித்துள்ளது. கேரள மாநில காங்கிரஸிடம் இருந்து இந்தத் தகவல் வெளியாகி உள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைமை இதைப் பற்றி இன்னும் வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை.
என்றாலும் ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவார் என்ற தகவலால் தேர்தல் களமும் காங்கிரஸ் தொண்டர்களும் பரபரப்புக்குள்ளாகி உள்ளனர். இதற்கு முன்பு தென்னிந்தியாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிட்டுருக்கிறார். கடந்த 1999-ல் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் போட்டியிட்டு சோனியா காந்தி வெற்றி பெற்றார்.