ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க காங்கிரசின் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் சோனியா காந்தி அதிர்ச்சியில் உள்ளார். காங்கிரஸ் துணைத்தலைவராக இருந்த ராகுல் காந்தி அண்மையில் தலைவராக உயர்த்தப்பட்டார். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்பதில் சோனியா தீவிரம் காட்டி வருகிறார். ராகுலும் கூட்டணி கட்சிகள் ஒப்புக் கொண்டால் பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்துவதில் பிரச்சனை இருக்காது என்று ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மாநிலம் தோறும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. உத்தரபிரதேசத்தில் காங்கிரசுடன் இணைந்து போட்டியிட மாயாவதியும், அகிலேஷ் யாதாவும் ஓ.கே. சொல்லிவிட்டனர். ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லாம் காங்கிரசுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் முடிவுக்கு வந்துவிட்டார். மராட்டியத்தில் சரத்பவாரும் காங்கிரஸ் கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளார்.

கர்நாடகத்தை பொறுத்தவரை ஏற்கவே காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் உள்ளது. பீகாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரசுடன் இணைந்தே நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாக அறிவித்தேவிட்டது. தமிழகத்திலும் தற்போதைய சூழலில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. இப்படி முக்கியமான மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதில் ஓரளவு முன்னேற்றத்தை கண்டிருந்தாலும் ஒரே ஒரு விஷயம் தான் அந்த கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

நரேந்திர மோடிக்கு எதிராக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்பதற்கு தான் பெரும்பாலான கூட்டணி கட்சிகள் தயங்குகின்றன. குமாரசாமி மற்றும் ஒமர் அப்துல்லா ஆகியோர் மட்டும் தான் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க தற்போது வரை சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், ராகுலை மட்டுமே பிரதமர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டார். காங்கிரசில் இருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை நடத்தி வரும் சரத்பவாரும் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்க தயங்குகிறார்.

மாயாவதியும், அகிலேசும் கூட ராகுலை அடுத்த பிரதமர் என்று பிரச்சாரம் செய்ய யோசிக்கின்றனர். மேலும் பிரதமர் வேட்பாளர் குறித்து ஒவ்வொரு கூட்டணி கட்சியும் ஒவ்வொரு கருத்துகளை முன்வைக்கின்றன. இதனால் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதத்திற்குள் எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிக்க வேண்டும் என்கிற இலக்குடன் சோனியா காய் நகர்த்துகிறார். ஆனால் அதற்கு கூட்டணி கட்சிகள் ஒத்துழைக்குமா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.