சீனாவில் உருவாகி, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன் போன்ற நாடுகளில் பேரிழப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் சமூக தொற்றாக மாறவில்லை. இந்தியாவில் 1000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 29 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக பரவுவதை தடுக்க, ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், சமூக பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் முற்றிலுமாக முடங்கியுள்ளன. தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறு தொழில்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என அனைத்து தரப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் பொருளாதாரமே முடங்கியுள்ளது. 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வளர்ந்த நாடுகள், ஊரடங்கு உத்தரவுக்கு பதிலாக வேறு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்தியாவின் சூழல் வித்தியாசமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதேநேரத்தில் வேறு வித்தியாசமான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். தினந்தோறும் கூலி வேலைக்கு சென்று பிழைக்கும் ஏழைகள் இருக்கும் நாடு இந்தியா. அப்படியிருக்கையில், திடீரென அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மொத்த பொருளாதாரமும் முடங்கியிருப்பதுடன், தினக்கூலிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

முழுமையான பொருளாதார முடக்கத்தின் விளைவு, கொரோனா மூலம் உருவாகும் உயிரிழப்புகளை விட மோசமாக இருக்கும். திடீரென அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மக்களிடையே பெரும் பதற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தொழிற்சாலைகள், சிறு தொழில்கள், கட்டுமான தொழில்கள் மூடப்பட்டதால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலத்துக்குச் செல்கிறார்கள். தினந்தோறும் ஊதியம் இல்லாமல், அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய முடியாமல் தொழிலாளர்கள் கஷ்டப்படுகின்றனர். 

இதுபோன்ற ஏழைத் தொழிலாளர்களுக்கு தங்குவதற்கு இடம் அளித்து, அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக அடுத்த சில மாதங்களுக்குப் பணம் செலுத்தி அரசு உதவ வேண்டும். முழுமையான லாக்டவுன் என்பது நிச்சயம் லட்சக்கணக்கான மக்களை வேலையிழக்க செய்யும். இதனால் அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். இதன் மூலம் வீடுகளிலும், கிராமங்களிலும் இருக்கும் முதியோர்கள் நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இதனால் பேரழிவு தரும் உயிரிழப்பு நேரிடும். 

அனைத்துவிதமான விஷயங்களையும் கருத்தில்கொட்னு மத்திய அரசு நுணுக்கமாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதியோரை பாதுகாப்பதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.