இந்தியாவில் அறிவிக்கப்பட்ட ஊரங்கு தோல்வியடைந்துவிட்டதாக அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவில் 1.47 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 10-வது இடத்துக்கு வந்துவிட்டது. ஒரு பக்கம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எகிறியப்படி உள்ளது. இன்னொரு பக்கம் இந்தியாவில் 4 முறையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டுவருகிறது. 2 மாதங்கள் ஆகியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சிக்கல் இன்னும் தீரவில்லை.
இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காணொளிக் காட்சி மூலம் பேட்டி அளித்தார். அதில், “முதல் கட்டமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, 21 நாட்களில் கொரோனா முடிவுக்கு வரும் என்று பிரதமர் மோடி  அறிவித்தார். ஆனால், 60 நாட்கள் தாண்டிய நிலையிலும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. எனவே ஊரடங்கு மிகப்பெரிய தோல்வி என்று நாங்கள் சொல்கிறோம்.  நாட்டில் பல மாநிலங்களில் கொரோனா பரவல் பல மடங்கு அதிகரித்துள்ளது.


 நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் கொரோனா மீட்பு நிதி என்று பிரதமர் அறிவித்தார். ஆனால், உண்மையில் 1 சதவீதம் கூட அது இல்லை. அதுவும் அறிவிக்கப்பட்டது எல்லாமே  கடன் வழங்கும் திட்டம்தான். ஏழைகளுக்கு எந்தப் பண உதவியும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் விசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு மாநிலங்களுக்கு எந்த நிதி உதவியும் வழங்கவில்லை. நிதியின்றி மாநில அரசுகள் தத்தளித்து வருகின்றன.


இனியாவது ஏழை தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் குடும்பத்துக்கு குறைந்தபட்சம் ரூ. 5,000 வழங்கவேண்டும். இதேபோல சிறு, குறு, நடுதர தொழில்களுக்கு நேரடி பண உதவிகள் வழங்கப்பட வேண்டும். பொருளாதாரத்தை மீட்டெடுக்க அதுவே வழி.” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.