* ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட ராகுல், “பிரதமர் மோடி எப்போது பார்த்தாலும் ‘மேக் இன் இந்தியா’ என்கிறார். ஆனால் எங்கு பார்த்தாலும் ‘ரேப் இன் இந்தியா’வாகத்தான் தெரிகிறது.” என்றார். இவர் பேசி சில நாட்கள் கழித்து, இப்போது இந்த விவகாரத்தை விஸ்வரூபமாக்கி இருக்கிறது பா.ஜ.க. ராகுல் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் என்று பா.ஜ.க.வினர் போர்க்கொடி தூக்குகிறனர் நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா அவைகளில்.-பத்திரிக்கை செய்தி.

* ராகுல் பேசியது இந்த சபைக்கு மட்டுமல்ல நம் நாட்டுக்கே அவமானம். அவர் கூறிய வார்த்தையைக் கூட மீண்டும் குறிப்பிட மனம் வரவில்லை. வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காகவும், இறக்குமதியை குறைத்து ஏற்றுமதியை அதிகரிப்பதற்காகவும் பிரதமர் உருவாக்கிய வாக்கிய கோஷத்தை இந்த வார்த்தைகளுடன் இணைத்துப் பேசுவது, மனதை புண்படுத்துவதாக உள்ளது. ராகுல் இந்த சபையின் உறுப்பினரகா இருப்பதற்கே தகுதியில்லாதவர். -    ராஜ்நாத் சிங் (ராணுவ அமைச்சர்)

* இந்த சபையின் உறுப்பினரான ராகுல், இஷ்டம் போல பேச அவருக்கு யார் அனுமதி தந்தது? இந்தியாவில் உள்ள பெண்களாகிய எங்களை எல்லாம் பாலியல் பலாத்காரம் செய்ய வரும்படி வெளிநாட்டவருக்கு அழைப்பு விடுக்கிறாரா அவர்? ‘இந்திய பெண்களை பலாத்காரம் செய்யுங்கள்’ என்று நேரு குடும்பத்திலிருந்து வந்த ஒருவர் பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது, தண்டனையும் வழங்க வேண்டும் அவருக்கு!-    ஸ்மிருதி இரானி (மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர்)

* ராகுல் பேசியது இந்திய பெண்களை மட்டுமல்ல, பாரத மாதாவையே அவமதிக்கும் செயல். இப்படி ஒரு மோசமான வார்த்தையை அவர் பிரயோகித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. -    லக்கெட் சட்டர்ஜி (பா.ஜ.க. எம்.பி.)

* பெண்களின் மாண்பை சீர்குலைக்கும் வகையிலும், அவமதிக்கும் வகையிலும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் பேசியிருப்பது வெட்கக்கேடான விஷயம். இந்த நாட்டை எந்த சூழலிலும் ஆளும் தகுதியை அக்கட்சி இழந்துவிட்டது இதன் மூலம். -நிர்மலா சீதாராமன் (மத்திய நிதி அமைச்சர்)

* ராகுல் இந்த சபையில் பேசவில்லை. இந்த சபைக்கு வெளியேதான் அதை பேசினார். அவர் பேசியதன் அர்த்தம் வேறு. அதை மாற்றி கூற வேண்டாம். நம் நாட்டில் பாலியல் பலாத்காரங்கள் அதிகமாக நடப்பதை சுட்டிக்காட்டி பேசியதில் தவறு ஒன்றும் இல்லை. அவர் பேச்சால் மேக் இன் இந்தியாவுக்கு அவமானம் ஏதும் ஏற்படவில்லை. பெண்கள் தினந்தோறும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகின்றனர். இந்த விஷயத்தில் பிரதமர் மோடி ஏன் எந்த கருத்தும் கூறாமல் மவுனம் காக்கிறார்? -கனிமொழி (தி.மு.க. எம்.பி.)

* குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இது குறித்து சபையில் பேச விடாமல் செய்ய வேண்டுமென்பதே பா.ஜ.க.வின் திட்டம் . பல நாட்களுக்கு முன் நான் பேசிய விஷயத்தை இப்போது விவகாரம் ஆக்குவதன் பின்னணி இதுதான். பிரச்னையை திசை திருப்பினாலும் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். மாறாக, பிரதமர்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். காரணம், இது தொடர்பாக  ஒரு வீடியோவை நான் வெளியிட போகிறேன். -    ராகுல்காந்தி (காங்கிரஸ் மாஜி தலைவர்)

* தி.மு.க. கார்ப்பரேட் நிறுவனம் போல நடத்தப்படுகிறது. எல்லாவற்றிலும் பணமே பிரதானமாக இருக்கிறது. அறிவு, நேர்மை எல்லாம் அக்கட்சியிலிருந்து பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது. எனவே அக்கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்து, ஸ்டாலினை சந்தித்து பேசிவிட்டுதான் வெளியேறினேன். -    பழ.கருப்பையா (இலக்கியவாதி, அரசியல்வாதி)

* மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை சென்னையில் நடத்தினார். அவர் வழி வந்த எங்கள் அரசு, கலைத்துறையை சார்ந்த அரசு, கலைத்துறையிலிருந்து உருவாகிய அரசு. -கடம்பூர் ராஜூ (செய்தித்துறை அமைச்சர்)

* நாட்டில் உள்ள அத்தனை ஆறுகளையும் தேசியமயமாக்க வேண்டும். இதன் மூலம் நதிகள் இணைப்பு சாத்தியமாவதுடன், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்னைகளும் முழுவதுமாய் தீர்ந்துவிடும். -    அன்புமணி ராமதாஸ் (பா.ம.க. இளைஞரணி தலைவர்)