பீகாரில் அக்டோபர் 28 தொடங்கி 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் காரணமாக பீகாரில் தேர்தல் பிரசாரத்தில் அனல் வீசுகிறது. இந்நிலையில் தேர்தலையொட்டி பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், ‘ தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் பீகார் மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்’ என்று பாஜக குறிப்பிட்டிருந்தது. பாஜகவின் இந்த அறிவிப்பு கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
பாஜகவின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “கொரோனாவை அணுகும் உத்தியை மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்கள் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், உங்கள் மாநிலத்தில் தேர்தல் எப்போது என்று பாருங்கள். பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.