Rahul Gandhi first speech after he swaron in as president of congress
“காங்கிரஸ் கட்சி நாட்டை 21-ம் நூற்றாண்டுக்கு அழைத்துச் சென்றது, ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி, நாட்டை மனிதர்களை வெட்டிக் கொல்லும் காட்டுமிராண்டிகாலத்துக்கு அழைத்துச் செல்கிறது’’ என்று காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி ஏற்ற ராகுல்காந்தி கடுமையாக சாடினார்.
சோனியா ஓய்வு
வயது மூப்பு, உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி சமீபகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் பல மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் அவரால் நேரடியாக பிரசாரத்தில் ஈடுபட முடியவில்லை. மூத்த நிர்வாகிகளை வீட்டுக்கு அழைத்து கட்சி தொடர்பாக ஆலோசனை வழங்கி வந்தார்.
ராகுல் தேர்வு
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியைத் தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, கடந்த 11–ந் தேதி காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.

பதவி ஏற்பு
இதையடுத்து, டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில்ராகுல் காந்தி தலைவராக பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
விருந்தினர்கள்
விழா மேடையில், ராகுல் காந்தி, 19 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பலர் அமர்ந்து இருந்தனர்.
இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தனது சகோதரர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக்கொள்வதை காண பிரியங்கா காந்தி அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரும் வந்திருந்தனர்.
முறைப்படி ஒப்படைப்பு
காங்கிரஸ் கட்சியின் தேர்தலை நடத்திய ேதர்தல் அதிகாரி முள்ளப்பள்ளி ராமச்சந்திரன், ராகுல்காந்தி தலைவராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை சோனியா காந்தியிடம் அளித்தார். அப்போது, ப்ரியங்கா காந்தி, அவரின்கணவர் ராபர்ட் வத்ரா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இருந்தனர்.

தலைவரானார்
இதையடுத்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 87-வது தலைவராகவும், நேரு குடும்பத்தில் இருந்து 6-வது காங்கிரஸ் தலைவராகவும் ராகுல் காந்தி பொறுப்பு ஏற்றார். அப்போது தனது தாய் சோனியா காந்தியின் நெற்றியில் முத்தமிட்டு, ராகுல் காந்தி தனது நன்றியை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மகிழ்ச்சி, ஆரவாரம்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வாகி உள்ளதை முறைப்படி அறிவித்ததும், கட்சியின் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் , நடனமாடியும், பாடல்கள் பாடியும், மேள, தாளங்கள் முழக்கமிட்டும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கடந்து வந்த பாதை
சோனியா காந்தி தலைவராக பொறுப்பு ஏற்ற தருணத்தில் கடந்த 1999ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களைப் பெற்று படுதோல்வியைச் சந்தித்தது. அதன்பின், 2004ம் ஆண்டு மீண்டு வந்து, 2014ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தது. கடந்த 2004ம் ஆண்டு ஆண்டு அரசியல் பிரவேசம் செய்த ராகுல் காந்தி, படிப்படியாக முன்னேறி கடந்த 2007ம் ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2013ம் ஆண்டு ஜனவரியில் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 4 ஆண்டுகளுக்கு பின் தற்போது காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்வாகியுள்ளார்.
கடும் விமர்சனம்
தலைவராக ராகுல் காந்தி பொறுப்பு ஏற்றபின், தனது முதலாவது பேச்சில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். அவர் தொண்டர்கள் மத்தியில் உற்சாகமாகப் பேசியதாவது-
காட்டுமிராண்டி காலம்
காங்கிரஸ் கட்சி நாட்டை 21ம் நூற்றாண்டுக்கு அழைத்துச் சென்றது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கட்சி, நாட்டை பின்னோக்கி இழுத்து, காட்டுமிராண்டி(இடைக்காலம்) காலத்துக்கு அழைத்துச் செல்கிறது.
ஏனென்றால், மக்கள் யாராக இருக்க வேண்டும் எனபதற்காக வெட்டிக் கொல்லப்படுகிறார்கள்; மக்கள் தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைகாக தாக்கப்படுகிறார்கள்; தாங்கள் சாப்பிடுவதற்காக கொல்லப்படுகிறார்கள்.
மாமனிதர்கள்
நான் இந்த தலைவர் பதவியை மிகுந்த பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு தெரியும், இந்த தலைவர் பதவியை மிகப்பெரிய மாமனிதர்கள் அலங்கரித்துள்ளார்கள். அவர்களின் நிழலை பின்தொடர்ந்துதான் நான் பணியாற்றுவேன்.
நசுக்கப்படுகிறார்கள்
பா.ஜனதா கட்சியினரை காங்கிரஸ் கட்சி எப்போதும் சகோதர, சகோதரிகளாகவே கருதுகிறது. ஆனால், அவர்களின் செயல்பாடுகளை, கருத்துக்களை ஏற்றுக் கொள்ளமாட்டோம். ஆளும் கட்சியினருக்கு எதிராக பேசுபவர்கள் குரல்கள் நசுக்கப்படுகின்றன. ஆனால், நாங்கள் அவ்வாறு பேசுபவர்களை அனுமதிக்கிறோம்.
பா.ஜனதா செய்யும் அட்டூழியங்களையும் தடுத்து நறுத்த முடியுமென்றால், அது மக்கள் மீது அன்பையும், நலனையும் செலுத்தும் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும்.
இதுதான் நாங்கள்
நாட்டின் ஒற்றுமையை பா.ஜனதா சீர்குலைக்கிறது. நாட்டை வன்முறையால் பற்றி எரியவிடுகிறார்கள். நாங்கள் அதை அணைக்கிறோம். இதுதான் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜனதா கட்சிக்கும் இடையிலான வேறுபாடாகும்.
அழைப்பு
நாட்டின் மிகவும் பழைமையான கட்சியான காங்கிரஸை, மிகவும் இளமையான கட்சியாக மாற்றுகிறோம். ஆத்திரமூட்டும் அரசியலுக்கு எதிராக அன்புடன் போராடுவோம். வன்முறை அரசியலுக்கு எதிராக போராட இளைஞர்கள் முன்வர வேண்டும். உங்கள் முன் உதாரணம் இருக்கிறது.
ஒரு முறை வன்முறை எனும் நெருப்பு பற்றினால், அதை அணைப்பது கடினம். இதைத் தான் மக்களிடம் பா.ஜனதா கட்சி குறித்து நாங்கள் கூறிக்கொண்டு இருக்கிறோம் . நாட்டில் வன்முறை எனும் நெருப்பை பா.ஜனதா கட்சி தூண்டிவிட்டால், இதை அணைப்பது கடினம்
மக்களுக்காக இல்லை
நம்மில் இன்று பலர் அரசியலில் நிலவும் சூழலால் ஆர்வமிழந்து இருக்கிறார்கள். அரசியலில் ஒருவிதமான இரக்கம், பணிவு, உண்மை இல்லாமல் போய்விட்டது. அரசியல் என்பது மக்களைச் சார்ந்து இருக்க வேண்டும். ஆனால், இன்று மக்களுக்காக அரசியல் பயன்படுவதில்லை. சமூகத்தில் மக்களை உயர்த்துவதற்காக பயன்படுத்தப்படாமல், அவர்களை நசுக்குவதற்காகவே அரசியல் பயன்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
