விஜய் மல்லையாவை நாட்டை விட்டு வெளியேற உதவியது பா.ஜ.க தான் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மறைமுக உரிமையாளரே ராகுல் காந்தி தான் என்று கூறி சில ஆவணங்களை பா.ஜ.க வெளியிட்டுள்ளது. டெல்லியில் இன்று பா.ஜ.க செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, கடந்த 2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்திற்கு பல்வேறு விதிகளை மீறி பொதுத்துறை வங்கிகள் கடன் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். மல்லையாவுக்கு கடன் கொடுக்குமாறு காங்கிரஸ்  மூத்த தலைவர் சோனியா காந்தியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பொதுத்துறை வங்கிகளை நிர்பந்தம் செய்ததாகவும் சம்பித் பாத்ரா கூறினார். மேலும் கிங்பிஷர் நிறுவனத்திற்கு ஆதரவாக சோனியா குடும்பம் செயல்பட்டதில் இருந்தே அந்த நிறுவனத்தின் மறைமுக உரிமையாளர்கள் இவர்கள் தான் என்பது தெரியவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

அத்துடன் சோனியாவும், ராகுலும் எங்கு சென்றாலும் கிங்பிஷர் விமானத்தையே பயன்படுத்தியும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் என்றும் சம்பித் பாத்ரா கூறினார். கிங்பிஷர் விமான நிறுவனம் ராகுல் மற்றும் சோனியாவுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியதற்கான காரணத்தை காங்கிரஸ் கட்சி விளக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும் கிங்பிஷர் நிறுவனத்திற்கும் சோனியா குடும்பத்திற்கும் இடையே உள்ள தொடர்புகளுக்கான ஆதாரம் என்று கூறி சம்பித் பாத்ரா சில ஆவணங்களையும் வெளியிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாக தற்போது கூறும் மல்லையாவை யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ளகூடாது என்றார். 

தற்போது தேடப்படும் குற்றவாளியான மல்லையா, தான் தப்பித்துக் கொள்ள எதை வேண்டுமானாலும் கூறுவார் என்றும் கோயல் தெரிவித்தார். மேலும் கிங்பிஷர் நிறுவனத்திற்கு முந்தைய காங்கிரஸ் அரசு எவ்வாறெல்லாம் உதவியது என்பதற்கான ஆதாரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறினார். தகுதியற்ற மல்லையாவுக்கு கேட்கும் போதெல்லாம் கடன் கொடுக்க சொல்லிவிட்டு தற்போது பா.ஜ.கவை ராகுல் காந்தி குறை கூறுவதாகவும் கோயல் சாடியுள்ளார்.