ராகுல் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் பயணமாக துபாய் சென்றிருந்தார். இந்தப் பயணத்தின்போது துபாய் தொழில்நுட்ப மேலாண்மை நிறுவன பல்கலைக்கழகம், தொழிலாளர் சமூகம் மற்றும் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ராகுல் பங்கேற்றுப் பேசினார்.  இதற்கு முன்னதாக மாட்டிறைச்சி சாப்பிட்டதாகவும், காலை உணவுக்கு 1,35,000 ரூபாய் செலவு செய்ததாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் வெளியாகின.

ராகுல் துபாய் சென்றபோது அபுதாபியில் காலை உணவு உண்டதும் நெட்டிசன்களால் விவாதமாக்கப்பட்டது. அந்த காலை உணவை அவர் உண்டபோது அவருடன் தொழிலதிபர் சன்னி வர்கே மற்றும் காங்கிரஸ் ஆலோசகர் சாம் பிட்ரோடா உடனிருப்பது அந்தப் புகைப்படங்களில் தெரிகிறது. அவர்கள் சாப்பிட்ட உணவு மேசையில் பல விதமான உணவுகள் பரவலாக வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆடம்பரமான காலை உணவுக்கு ராகுல் காந்தி 1,500 பவுண்டுகள் செலவிட்டதாக ட்விட்டரில் விமர்சித்திருந்தனர்.

“துபாய் ஹில்டனில் இருக்கிற பெருவிருந்து ஹாலில் ரூ.1,35,000 அதாவது துபாய் கணக்குப்படி 1,500 பவுண்டுகள்  செலவு செய்து காலை உணவை சாப்பிட்டுக்கொண்டே வறுமை ஒழிப்பு குறித்து ராகுல் காந்தி ஆலோசித்துக்கொண்டுடிருக்கிறார்” என்று ரிஷி பஹ்ரி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இது இதுவரையில் 4,200க்கும் அதிகமானோரால் பகிரப்பட்டும், 2,700க்கும் அதிகமானோரால் ரீ-ட்விட் செய்யப்பட்டும் உள்ளது. இவர் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பாஜகவினர்களைப் பின்தொடர்கிறார்.

இந்த மேட்டர் டிவிட்டர், ஃபேஸ்புக்கிலும் பலரால் பகிரப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் செய்தியும் உண்மையல்ல. பவுண்ட் என்று பதிவிட்டிருப்பதிலிருந்தே இதன் உண்மைத்தன்மையை எளிதில் அறியலாம். ஏனென்றால் துபாயில் நாட்டு பணம் திர்ஹாம் ஆகும். அந்த காலை உணவை ராகுல் சாப்பிட்டது ஜெம்ஸ் எஜுகேஷன் மற்றும் வர்கே ஃபவுண்டேஷன் நிறுவனரான சன்னியின் வீட்டில். இது காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் அன்றைய தினமே பகிரப்பட்டுள்ளது. இந்த விருந்தை வழங்கியவர் சன்னி என்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சன்னி வீட்டில் சாப்பிட்டபோது ராகுல் சாப்பிட்ட உணவு மேசையில் மாட்டிறைச்சி இருந்ததாகவும், தன்னை தாத்தாத்ரேய கவுல் பிராமணர் என்று சொல்லிக்கொள்ளும் ராகுல் துபாய் சென்று மாட்டிறைச்சி உண்டதாகவும் சர்ச்சையைக் கிளப்பினர். துபாய் ஓர் இஸ்லாமிய நாடு. அங்கு பன்றி கரியை விருந்தளிக்க மாட்டார்கள். எனவே அவரது மேசையில் இருந்தது மாட்டிறைச்சிதான் என்றும் நெட்டிசன்கள் கூறியிருந்தனர் ஆனால், “உண்மையில் அங்கு மாட்டிறைச்சி பரிமாறப்படவில்லை. வலைதளங்களில் வட்டமிட்டுக் காட்டிய இறைச்சி வான்கோழியாகும். ராகுல் காந்தி ஆரஞ்சுப் பழச்சாறும், முட்டைப் பொரியலும் மட்டுமே சாப்பிட்டார்” என்று காங்கிரஸ் பேச்சாளர் ஒருவர்  கூறியுள்ளார்.