தமிழகத்தில் 3 நாட்கள் முழு வீச்சில் பிரச்சாரம் செய்தும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அதிமுக அரசையோ, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையோ பெரிய அளவில் விமர்சனம் செய்யவில்லை.

சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சுமார் 40 தொகுதிகளை திமுக கூட்டணியில் எதிர்பார்க்கிறது. ஆனால் திமுகவோ அதில் பாதி என 20 தொகுதிகள் வரை மட்டுமே காங்கிரசுக்கு என்று பிடிவாதம் காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் திமுக இறுதி முடிவாக எதையும் கூறாமல் தேர்தல் அறிவிக்கட்டும் பார்க்கலாம் என்று காங்கிரசிடம் காலம் கடத்தி வருவதாகவும் சொல்கிறார்கள். ஆனால் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இரண்டு முறை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை இறுதி செய்ய வேண்டும் என்றே அவர் வலியுறுத்திச் சென்றார்.

ஆனால் திமுகவோ தற்போதே தொகுதி ஒதுக்கீட்டை முடித்தால் கூட்டணியில் சலசலப்பு ஏற்படும் என்று கருதுகிறது. தேர்தல் அறிவிப்பிற்கு பின்னர் என்றால் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டும் என்கிற நெருக்கடி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு இருக்கும் என்று நினைக்கிறது. மேலும் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால் உடனடியாக கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேறு கூட்டணிக்கு செல்வது, புதிய கூட்டணியை அமைப்பது போன்றவற்றிற்கும் சிக்கல் ஏற்படும் என்று திமுக கருதுகிறது. இதே காரணத்திற்காகவே காங்கிரசும் திமுகவிடம் தங்களுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ள தற்போதே வலியுறுத்தி வருகிறது.

ஆனால் திமுக இந்த விஷயத்தில் பிடிவாதமாக உள்ளதால் காங்கிரஸ் கட்சியும் வேறு சில வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ளது. திமுக கொடுக்கும் 20 தொகுதிகளுக்காக அந்த கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. அதிமுகவுடன் பாஜக உள்ளதால் அங்கு செல்லவும் வாய்ப்பு இல்லை. எனவே 3வது அணிக்கான வாய்ப்புகளையே காங்கிரஸ் தற்போது பரிசீலித்து வருகிறது. கமல், திருமாவளவன் போன்றவர்களை சேர்த்துக் கொண்டு புதிய அணியை அமைத்து ராகுலை அழைத்து வந்து மீண்டும் பிரச்சாரம் செய்யலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது.

இதன் முன்னோட்டமாகவே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்த கடந்த வாரம் 3 நாட்கள் வரை தமிழகம் வந்து பிரச்சாரம் செய்துவிட்டு சென்றார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் கூட ராகுல் காந்தி தமிழகத்தில் இத்தனை நாட்கள் இருந்தது இல்லை. ஆனால் 3 நாட்கள் வரை தமிழகத்தின் கொங்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் செய்த ராகுல் காந்தி தமிழக அரசியல் குறித்து பெரிய அளவில் பேசவில்லை. குறிப்பாக தமிழகத்தை ஆளும் அதிமுக அரசை அவர் விமர்சிப்பதை முடிந்த அளவிற்கு தவிர்த்தே வந்தார். இதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் எதிர்மறையாக ராகுல் காந்தி பெரிய அளவில் எதையும் பேசவில்லை.

அத்துடன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான மு.க.ஸ்டாலினுக்கோ, திமுக கூட்டணிக்கோ மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்யவில்லை. ராகுலின் பிரச்சாரம் முழுக்க முழுக்க பிரதமர் மோடியை விமர்சிப்பதாக மட்டுமே இருந்தது. அத்தோடு தமிழ், தமிழர்கள் என கலாச்சாரம், பண்பாடு சார்ந்தே ராகுல் காந்தி பேசிவிட்டு சென்றார். பிரச்சாரத்தின் கடைசி நாளில் மட்டும் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ் ஏற்கிறது என்று கூறினார். ஆனால் அவரை முதலமைச்சராக்க மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ராகுல் பிரச்சாரம் செய்யவில்லை.

மு.க.ஸ்டாலினை முன்னிலைப்படுத்தாதது, எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்காதது என ராகுல் மேற்கொண்ட பிரச்சாரம் முழுக்க முழுக்க திமுகவிற்கு செக் வைக்கும் செயல் என்கிறார்கள். கூட்டணியில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால் தனித்து களம் இறங்கவும் தயார் என்று கூறும் வகையிலேயே ராகுலை அழைத்து வந்து காங்கிரஸ் பிரச்சாரத்தை முடித்துள்ளது என்கிறார்கள். அதே சமயம் நாடாளுமன்ற தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்னரே ராகுல் காந்தியை பிரதமராக்குவோம் என்று மு.க.ஸ்டாலின் முழங்கினார். ஆனால் காங்கிரசோ தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் கூட ராகுல் காந்தியை வைத்து வருங்கால முதலமைச்சர் ஸ்டாலின் என்று கூட கூறவைக்கவில்லை.