கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. கர்நாடகாவை கைப்பற்றும் முயற்சியில் பாஜகவும் காங்கிரஸும் தீவிரம் காட்டிவருகின்றன.

மத்தியில் 2014ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தபிறகு, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், குஜராத், இமாச்சல பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. அந்த வரிசையில், கர்நாடகாவிலும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டிவருகிறது.

அதேநேரத்தில் பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் ஆட்சியமைக்க முடியாமல், தோல்வியை சந்தித்துவரும் காங்கிரஸ் கட்சி, தாங்கள் ஆளுங்கட்சியாக இருக்கும் கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைக்க தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

கர்நாடகாவை கைப்பற்ற பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிரம் காட்டுவதால், பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி ஆகிய தேசிய தலைவர்கள் கர்நாடகாவில் களத்தில் குதித்துள்ளனர்.

இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவில் மூன்றாம் கட்ட சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி, நேற்று சிக்மகளூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். 

அப்போது, சிருங்கேரி மடத்தில் உள்ள குழந்தைகளிடம் மதம் என்றால் என்ன? என‌ கேட்டேன். அதற்கு குழந்தைகள் ‘மதம் என்றால் சத்தியம். மதம் என்றால் அன்பு’ என்றார்கள். ஆனால் பிரதமர் மோடி சத்தியத்தையும் அன்பையும் மறந்துவிட்டு மத அரசியலை செய்து கொண்டிருக்கிறார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என மோடி வாக்குறுதி அளித்தார். ஆட்சியே முடிய போகிறது. எப்போது வங்கியில் ரூ.15 லட்சத்தை செலுத்துவீர்கள் மோடி? என மக்கள் கேள்வி எழுப்பி கொண்டிருப்பதாக தெரிவித்தார்.