வெறுப்புணர்வை பயன்படுத்தி மக்களை பாஜக பிளவுபடுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 2 நாள் தேசிய அளவிலான 84-வது மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, கபில் சிபல் உள்ளிட்ட பல தலைவர்கள், காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள், மாநிலத் தலைவர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின் முதல் முறையாக இந்த மாநாட்டுக்கு தலைமை ஏற்கிறார். மாநாட்டை தொடங்கி வைத்து ராகுல் காந்தி பேசினார்.

அப்போது, நாட்டில் தற்போது முக்கியப் பிரச்சினைகளான இருக்கும் வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவைகளில் இருந்து மக்களை திசை திருப்ப வெறுப்புணர்வை ஆயுதமாக மத்தியில் ஆளும் பாஜக பயன்படுத்துகிறது.

வெறுப்புணர்வு எனும் கருவியைப் பயன்படுத்தி, மக்களிடையே பிரிவினையை பாஜக உண்டாக்குகிறது. ஆனால், இதுபோன்ற செயல்களை ஒருபோதும் காங்கிரஸ் கட்சி செய்யாது. இந்த நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்ல காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். சாதி,மத பாகுபாடு இன்றி அனைத்து மக்களையும் ஒன்றாக அழைத்துச் செல்லும் கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கு இருக்கும் மிகப்பெரிய வேறுபாடு வெறுப்பும், அன்பும் தான். பாஜக வெறுப்புணர்வை பயன்படுத்துகிறது, நாங்கள் அன்பை கருவியாகப் பயன்படுத்தி மனிதர்களை அரவணைக்கிறோம். இந்த நாடு அனைத்து மக்களுக்கானது. அனைத்து சாதியினர் மற்றும் மதத்தினருக்குமான நாடு இது. காங்கிரஸ் செய்யும் அனைத்து செயல்களும் மக்களின் நலனுக்கானது, எந்த பிரவினரும் ஒதுக்கப்படமாட்டார்கள் என ராகுல் காந்தி பேசினார்.