நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து தி.மு.கவுக்கு அல்வா கொடுக்க ராகுல் காந்தி காய் நகர்த்துவதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்து வருகின்றன.

   கடந்த 2004 மற்றும் 2009 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது காங்கிரஸ். அந்த இரண்டு தேர்தல்களிலுமே தொகுதிப் பங்கீட்டில் பெரும் இழுபறி இருந்தது. காங்கிரஸ் கேட்ட எண்ணிக்கை மட்டும் அல்ல கேட்ட தொகுதிகளிலும் கொடுக்கப்படவில்லை. இருந்தாலும் அப்போது வேறு வழியில்லாமல் தி.மு.கவுடன் காங்கிரஸ் கூட்டணியை தொடர்ந்தது.

   ஆனால் 2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசை முன்கூட்டியே தி.மு.க கழட்டிவிட்டு தனியாக களம் இறங்கியது. காங்கிரசுடனும் கூட்டணி வைக்க யாரும் முன்வரவில். இதனால் கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெரும்பலானவர்கள் தமிழகத்தில் டெபாசிட்டை பறிகொடுத்தனர். இருந்தாலும் 2016 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி மலர்ந்தது. காங்கிரசுக்கு 41 தொகுதிகளை தி.மு.க ஒதுக்கியது.

   தற்போது தி.மு.க – காங்கிரஸ் இடையே கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் கடந்த காலங்களை போல் தற்போது தமிழக அரசியல் சூழல் இல்லை. ஜெயலலிதா இருந்தவரை அவர் காங்கிரசுடன் கூட்டணியை விரும்பவில்லை. இதனால் தான் வேறு வழியின்றி காங்கிரசும் தி.மு.கவுடன் இணைந்திருந்தது. ஆனால் தற்போது அ.தி.மு.க இரண்டாக பிரிந்த நிலையில் தனியாக கட்சி நடத்தி வரும் தினகரன் நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க வெளிப்படையாகவே அழைப்பு விடுத்து வருகிறார்.

    25 தொகுதிகளில் அ.ம.மு.க போட்டி என்றும் எஞ்சிய 15 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு என்றும் தினகரன் வெளிப்படையாகவே அறிவித்து வருகிறார். எஞ்சிய 15 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு என்று தினகரன் கூறுவது காங்கிரசை மனதில் வைத்து தான். நாடாளுமன்ற தேர்தலில் மோடி அணிக்கு எதிரான ஒரு அணியில் களம் இறங்கினால் தமிழகத்தில் வாக்குகளை அள்ளிவிடலாம் என்பது தினகரன் கணக்கு. இதற்கு ராகுலுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தினகரன் துடியாய் துடிக்கிறார்.

   ராகுலும் சசிகலா தரப்புடன் நல்ல அன்டர்ஸ்டேன்டிங்கில் தான் உள்ளார். ஜெயலலிதா உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்த போது பா.ஜ.க மேலிடம் அ.தி.மு.க அரசுக்கு நெருக்கடி கொடுத்த போது டெல்லியில் இருந்து ஓடோடி வந்து சசிகலாவை சந்தித்துவிட்டு சென்றார் ராகுல். அந்த சந்திப்பின் பின்னணியில் அப்போது ம.நடராசன் இருந்தார். தற்போது அப்போது ஏற்பட்ட நட்பை ராகுல் சசிகலா தரப்புடன் தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் தான் கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் கமிட்டி ராகுலுக்கு வழங்கியுள்ளது.

   என்னதான் தற்போது தமிழகத்தில் காங்கிரஸ் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்தாலும், தேர்தல் சமயத்தில் கேட்கும் தொகுதிகள் கிடைக்குமா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. ஏனென்றால் தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க, இடதுசாரிகள் இருக்கின்றனர். அவர்களுக்கும் தொகுதிகளை கொடுக்க வேண்டும் என்கிற காரணத்தை கூறி காங்கிரசுக்கு தொதிகளை தி.மு.க குறைக்க கூடும். இதனை தவிர்க்க தற்போதே தினகரனுடன் பேசி வைத்துக் கொள்வது சாணக்கியத்தனம் என்று ராகுல் கருதுவதாகவும், அதற்கு என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியில் உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு நபரை தூது அனுப்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது.