Rahul Gandhi afraid of women leaders in BJP Shahnawaz Hussain

பாஜக.,வில் இருக்கும் பெண் தலைவர்களைக் கண்டு ராகுலுக்கு உதறல் எடுத்துள்ளது என பாஜக., மூத்த தலைவர் ஷா நவாஸ் ஹுசேன் கூறியுள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம் பலியாவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஷா நவாஸ் ஹுசேன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் குறித்து விமர்சித்தார். அப்போது அவர், பாஜக., ஆர்எஸ்எஸ்., இரண்டையும் புரிந்து கொள்ள ராகுல் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். 

வடோதராவில் மாணவர்கள் மத்தியில் இரு தினங்களுக்கு முன்னர் பேசிய ராகுல், பெண்கள் அமைதியாக இருந்தால், அவர்களை நல்லவர்கள் என்று கூறும் பாஜக., அவர்கள் வாய் திறந்து பேசினால், அவர்களின் வாயை மூட முயற்சி செய்கிறது என்றார். மேலும், அவர்களின் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்., அந்த அமைப்பில் எத்தனை பெண்கள் உள்ளனர்? அவர்களின் ஷாகா எனும் கிளைகளில் எத்தனை பெண்கள் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். 

ராகுலின் இந்தக் கருத்து துரதிருஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ள ஷா நவாஸ் ஹுசைன், ராகுல் தனது எல்லைகள் அனைத்தையும் மீறி விட்டார் என்று கூறினார். மேலும், பாஜக.,வில் உள்ள பெண் தலைவர்களைப் பார்த்து ராகுலுக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான், பாஜக.,வும் ஆர்எஸ்எஸ்.,சும் பெண்களை இழிவுபடுத்துகின்றன எனக் கூறுகிறார். மகாத்மா காந்தி ஏற்கெனவே கூறினார், காங்கிரஸை கலைத்துவிட வேண்டும் என்று. மகாத்மாவின் அந்த ஆசையை ராகுல் நிறைவேற்றுவார் என்று கருத்து தெரிவித்தார். 

ராகுலின் முன்னர் எப்போதெல்லாம் ஸ்மிருதி இரானியின் பெயர் முன் நிற்கிறதோ அப்போதெல்லாம் ராகுல் ரொம்பவே பயப்படுகிறார் என்றும் கருத்து தெரிவித்தார் ஷா நவாஸ் ஹுசைன்.